பா.ஜ.க.வின் வகுப்புவாத அரசியலை கேரளாவில் வேரூன்ற அனுமதிக்க மாட்டோம் - பினராயி விஜயன்

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் சி.ஏ.ஏ.வை ரத்து செய்வதாக உறுதியளிக்கப்படவில்லை என்று பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

Update: 2024-04-06 11:14 GMT

ஆலப்புழா,

கேரளாவில் பா.ஜ.க.வின் வகுப்புவாத அரசியலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேரூன்ற அனுமதிக்க மாட்டோம் என்றும், பா.ஜ.க கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல் பார்த்து கொள்வதாகவும் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

ஆலப்புழாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சி.ஏ.ஏ. சட்டத்தை அகற்றுவோம் என எங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையில் நாங்கள் உறுதி அளித்திருக்கிறோம். சி.ஏ.ஏ. மட்டுமல்லாது, பணமோசடி தடுப்புச் சட்டம், சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் போன்ற கொடூர சட்டங்களையும் அகற்றுவதற்கான வாக்குறுதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அளித்துள்ளது.

சி.ஏ.ஏ. சமூகத்தை பிளவுபடுத்துகிறது. நமது நாட்டின் முஸ்லிம்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றுவதை இது நோக்கமாக கொண்டுள்ளது. ஆனால், காங்கிரசும் அதன் தலைமையும் சி.ஏ.ஏ. குறித்து மவுனம் காத்து வருகின்றன. அதன் காரணமாகவே, அதன் தேர்தல் அறிக்கையில் சி.ஏ.ஏ.வை ரத்து செய்வதாக உறுதியளிக்கப்படவில்லை.

சி.ஏ.ஏ. மற்றும் பிற கொடூர சட்டங்கள் மீதான காங்கிரசின் மவுனம், சங்பரிவாரின் இந்துத்துவா திட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் காங்கிரஸ் தீவிரமாக இல்லை என்பதையே சுட்டிக்காட்டுகிறது. சி.ஏ.ஏ. விவகாரத்தை காங்கிரஸ் தவிர்த்திருப்பது திட்டமிடப்பட்டது. ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370-ஐ பா.ஜ.க. ரத்து செய்தது. மத்திய அரசின் அந்த முடிவை காங்கிரஸ் எதிர்க்க தவறியது.

கேரளாவில் உள்ள 20 மக்களவை தொகுதிகளில், எந்த ஒரு தொகுதியிலும் பா.ஜ.க. இரண்டாவது இடத்தில் கூட வராது. கேரளாவில் பா.ஜ.க.வின் வகுப்புவாத அரசியலை வேரூன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அனுமதிக்காது. சங்பரிவாரை முழு பலத்துடன் எதிர்ப்போம். அவர்களை ஆட்சியில் இருந்து அகற்றப் பாடுபடுவோம்" என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்