மகளிர் இடஒதுக்கீட்டால் அரசியலில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கும் - பிரதமர் மோடி

மகளிர் இடஒதுக்கீட்டால் அரசியலில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Update: 2023-09-22 06:13 GMT

புதுடெல்லி,

மகளிருக்கு 33% இடஒதுக்கீட்டு மசோதா மக்களவை, மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டதற்கு பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து கூறி வருகின்றனர். நேற்று பெண் எம்பிக்கள் ஒன்றாக கூடி பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தனர்.

இந்த நிலையில், மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டதையடுத்து இன்று பிரதமர் மோடி டெல்லி பா.ஜ.க. தலைமை அலுவலகத்திற்கு வந்தார். அவருக்கு அங்கு பா.ஜ.க மகளிர் அணி, தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். மேடைக்கு வந்த பிரதமருக்கு பெண்கள் பெரிய மாலை அணிவித்து காலில் விழுந்து வணங்கினர்.

அதன்பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது:-

நாட்டின் அனைத்து பெண்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நேற்று முன்தினம் ஒரு புதிய சரித்திரம் படைத்தோம். அந்த வரலாற்றை உருவாக்க கோடிக்கணக்கான மக்கள் எங்களுக்கு வாய்ப்பளித்தது அதிர்ஷ்டம்.

ஆண்டாண்டு காலமாக மகளிர் மசோதாவுக்காக நாடு காத்திருந்தது; 27 ஆண்டுகாலம் கிடப்பில் இருந்த மசோதாவை இரண்டே நாளில் நிறைவேற்றினோம். மகளிர் இடஒதுக்கீடு தொடர்பாக நாங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டோம். மகளிர் இடஒதுக்கீட்டால் அரசியலில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கும்.

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு பல தடைகள் இருந்தன. ஆனால் இந்த மசோதாவுக்கு நாடாளுமன்றத்தில் அதிக ஆதரவு கிடைத்தது ஒரு சாதனை. இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், எம்.பி.க்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பெண்கள் ஓர் உறுதி எடுத்தால், அதனை உயிரை கொடுத்தாவது நிறைவேற்றுவார்கள். குஜராத்தில் அமுல் நிறுவனம் வளர்ச்சி அடைந்ததற்கு பெண்களின் உழைப்பே காரணம்.

நாடாளுமன்றத்தில் மகளிருக்கான 33% இட ஒதுக்கீடு மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் பெண்கள் தலைமையிலான வளர்ச்சி மேம்படுத்துதலில் குறிப்பிடத்தக்க மைல்கல்லை நம் நாடு எட்டியுள்ளது. மகளிர் இடஒதுக்கீடு மசோதாவிற்கு சிலர் அரசியல் சாயம் பூச முயற்சி செய்கின்றனர். யாருடைய சுயநலமும் மகளிர் இடஒதுக்கீட்டில் தடைகளை ஏற்படுத்த அனுமதித்ததில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்