கணவனை ஒருமுறையாவது நேரில் பார்க்க விரும்பிய மனைவி: ஏர் இந்தியா விமான சேவை பாதிப்பால் நிறைவேறாத ஆசை

கேரளாவை சேர்ந்த ராஜேஷ் ஓமனில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.;

Update:2024-05-14 15:41 IST

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் கரமனா பகுதியை சேர்ந்தவர் நம்பி ராஜேஷ் (வயது 40). இவரது மனைவி அம்ருதா. நம்பி ராஜேஷ் ஓமன் நாட்டின் மஸ்கட் நகரில் உள்ள இந்திய பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். அம்ருதா தனது குழந்தைகளுடன் கேரளாவில் தாயார் வீட்டில் வசித்து வருகிறார்.

இதனிடையே, மஸ்கட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவந்த ராஜேசுக்கு கடந்த 7ம் தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவர் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.இந்நிலையில்  அவர் தனது மனைவி அம்ருதா மற்றும் குழந்தைகளை பார்க்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதேவேளை, ராஜேசுக்கு மாரடைப்பு ஏற்பட்டது குறித்து கேரளாவில் உள்ள அம்ருதாவுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மேலும், அவர் மனைவி மற்றும் குழந்தைகளை பார்க்க விரும்புவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து கணவனை காணவேண்டுமென கடந்த 8ம் தேதி கேரளாவில் இருந்து மஸ்கட் செல்ல ஏர் இந்தியா விமானத்தில் டிக்கெட் எடுத்துள்ளார்.

ஆனால், அன்றைய தினம் ஏர் இந்தியா விமான ஊழியர்கள் 300க்கும் மேற்பட்டோர் பணிக்கு வராமல் விடுப்பு எடுத்தனர். இதனால் 80க்கும் மேற்பட்ட விமானகள் ரத்து செய்யப்பட்டன. இதில் கேரளாவில் இருந்து மஸ்கட் செல்லவிருந்த விமானமும் ரத்து செய்யப்பட்டது. விமான ஊழியர்கள் பணிக்கு வராமல் விடுப்பு எடுத்த நிலையில் இது குறித்து அறியாத அம்ருதா மஸ்கட் செல்ல விமான நிலையம் வந்து மிகுந்த ஏமாற்றம் அடைந்தார்.

பின்னர், விமான நிறுவன ஊழியர்களிடம் முறையிட்டுள்ளார். இதையடுத்து, 9ம் தேதி மஸ்கட் செல்ல ஏர் இந்தியா நிறுவனம் அம்ருதாவுக்கு டிக்கெட் வழங்கியுள்ளது. ஆனால், அன்றைய தினமும் விமான ஊழியர்கள் பணிக்கு வராததால் கணவனை காண மஸ்கட் செல்ல திட்டமிட்டிருந்த அம்ருதாவின் பயணம் மீண்டும் ரத்தானது. இதனை தொடர்ந்து ஊழியர்கள் பணிக்கு  வந்த நிலையில் மஸ்கட் செல்ல அம்ருதாவுக்கு டிக்கெட் கிடைக்கவில்லை. இதனால், அம்ருதாவின் பயணம் ரத்தானது.

இந்நிலையில், மஸ்கட்டில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ராஜேஷ் சிகிச்சை உடல்நிலை சற்று முன்னேற்றம் அடைந்ததையடுத்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு தங்கியுள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்றுள்ளார்.

அவர் ஞாயிற்றுக்கிழமை மனைவி அம்ருதாவிடம் செல்போனில் பேசியுள்ளார். அப்போது, மனைவி மற்றும் குழந்தைகளை பார்க்க வேண்டும் என கூறியுள்ளார். மனைவியிடம் பேசிவிட்டு உறங்கிய ராஜேசுக்கு மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவர் வீட்டில் உள்ள படுக்கையிலேயே உயிரிழந்துள்ளார்.

ராஜேஷ் உயிரிழந்தது குறித்து அவரது மனைவி அம்ருதாவுக்கு நேற்று தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. கணவன் மரணமடைந்தது குறித்த செய்தி கேட்ட அம்ருதா கண்ணீர் விட்டு அழுதார். உடல்நலம் பாதிக்கப்பட்ட கணவரை உயிருடன் ஒருமுறையாவது நேரில் பார்த்துவிடவேண்டும் என்ற அம்ருதாவின் எண்ணம் ஏர் இந்தியா ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் நிறைவேறாமல் போனது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்