கோழிக்கோடு: தமிழகத்தை சேர்ந்த பெண் பயிற்சியாளர் தூக்குப்போட்டு தற்கொலை - காரணம் என்ன?

கோழிக்கோடு தடகள பள்ளியில் தமிழகத்தை சேர்ந்த பெண் பயிற்சியாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-10-28 22:38 GMT

கோப்புப்படம்

திருவனந்தபுரம்,

இந்தியாவின் தங்க மங்கை என்று அழைக்கப்படுபவர் பி.டி.உஷா. இவர் ஓட்டப்பந்தயத்தில் சர்வதேச அளவில் தங்கம், வெள்ளி உள்பட ஏராளமான பதக்கங்களை குவித்து உள்ளார். தடகள போட்டியில் சாதனை படைத்துள்ள பி.டி.உஷா தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். பி.டி.உஷா கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு பாலுசேரி கினாலூரில் தடகள பயிற்சி பள்ளி நடத்தி வருகிறார். இந்த பயிற்சி பள்ளியில் இணை பயிற்சியாளராக தமிழகத்தில் உள்ள கோவை குளத்து பாளையத்தை சேர்ந்த பழனிச்சாமி என்பவரது மகள் ஜெயந்தி (வயது 27) பணியாற்றி வந்தார்.

அவர் அங்குள்ள விடுதியில் தங்கி இருந்து பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அவர், நேற்று பயிற்சிக்கு வரவில்லை. இதனால் அதிகாலை 5 மணியளவில் மற்ற பயிற்சியாளர்கள் ஜெயந்தி தங்கி இருந்த விடுதிக்கு சென்று பார்த்தனர்.

அப்போது அவர் படுக்கை அறையில் இருந்த மின் விசிறியில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து பள்ளி நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உடனடியாக பாலுசேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார். உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோழிக்கோடு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பெண் பயிற்சியாளர் ஜெயந்தி தற்கொலை செய்து கொள்ள காரணம் என்ன? என்று போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்