பெண் நிருபர் விவகாரம்: நடிகர் சுரேஷ் கோபி முன்ஜாமீன் மனு தாக்கல்
பெண் நிருபரிடம் ஒரு தந்தையை போன்று மன்னிப்பு கோர தயாராக இருப்பதாக சுரேஷ் கோபி தெரிவித்து இருந்தார்.;
திருவனந்தபுரம்,
கேரளாவில் பிரபல நடிகர் மற்றும் பா.ஜ.க. முன்னாள் எம்.பி.யான சுரேஷ் கோபி, கடந்த அக்டோபர் மாதம் கோழிக்கோட்டில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டபோது அவரிடம் பெண் நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு கோபி பதிலளிக்கும்போது, 'மோலே' (மகளே) எனக் கூறி நிருபரின் தோள் மீது கை வைத்துள்ளார்.
இதுபற்றிய வீடியோ ஒன்றும் வெளிவந்தது. அவரது இந்த செயலால், அந்த பெண் நிருபர் பின்னால் நகர்ந்து சென்றார். தொடர்ந்து 2-வது கேள்வியை அந்த பெண் நிருபர் கேட்டபோதும், அவருடைய தோள் மீது சுரேஷ் கோபி கையை வைத்துள்ளார். அவருடைய கையை பெண் நிருபர் தள்ளி விடும் காட்சிகள் வெளியாகி வைரலாக பரவின.
இதைத் தொடர்ந்து நடிகர் சுரேஷ் கோபி சமூக ஊடகம் வழியே வெளியிட்ட பதிவில், நட்பு ரீதியிலேயே அந்த பெண் நிருபரிடம் நடந்து கொண்டதாகவும், அவர் அதனை தவறாக எண்ணினார் என்றால், அவரிடம் ஒரு தந்தையை போன்று மன்னிப்பு கோர தயாராக இருப்பதாகவும் தெரிவித்து இருந்தார்.
எனினும், இது குறித்து சம்பந்தப்பட்ட பெண் நிருபர் கூறும்போது, சுரேஷ் கோபி கேட்டுள்ள மன்னிப்பு, மன்னிப்பு கேட்பதற்கு பதிலாக விளக்கம் அளிப்பது போன்று உள்ளது என்றும், அவருக்கு எதிராக சட்ட ரீதியாக அணுக உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் இந்த விவகாரம் பற்றி கோழிக்கோடு நகர ஆணையாளரிடம் புகார் ஒன்றையும் அந்த பெண் நிருபர் அளித்துள்ளார்.
பெண் நிருபர் அளித்த புகாரின் அடிப்படையில் கேரள போலீசார் நடிகர் சுரேஷ் கோபியிடம் விசாரணை நடத்தினர். இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கேரள ஐகோர்ட்டில் நடிகர் சுரேஷ் கோபி முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.