4 மாதமாக பொருட்கள் வழங்காத ரேஷன்கடை பெண் ஊழியர்... ஆத்திரத்தில் கிராம மக்கள் செய்த சம்பவம்
மாவட்ட வழங்கல் அதிகாரி மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் இந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தனர்.
தும்கா,
ஜார்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் உள்ளது மதுபன் கிராமம். இங்குள்ள ரேஷன் கடையில் கடந்த 4 மாதங்களாக ரேஷன் பொருட்கள் சரியாக வழங்கப்படவில்லையாம். இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள், ரேஷன் கடையில் வேலை செய்யும் பெண் ஊழியருக்கு செருப்பு மாலை அணிவித்து, கிராமத்தில் ஊர்வலமாக அழைத்து வந்தனர்.
அவர்கள் கோவிந்தபூர்-சாகேப்கஞ்ச் நெடுஞ்சாலையை மறித்து போராட்டம் நடத்தினர். இதனால் சிறிது நேரத்துக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பரபரப்பும் ஏற்பட்டது.
இதையடுத்து மாவட்ட வழங்கல் அதிகாரி மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் சம்பவம் குறித்து கேட்டறிந்தனர். மறுநாள் (இன்று) முதல் ரேஷன்பொருள் வினியோகிக்க உறுதி அளித்ததன் பேரில் கிராம மக்கள் கலைந்து சென்றனர்.