கல்லால் தாக்கி பெண் கொலை; கணவருக்கு போலீஸ் வலைவீச்சு
கல்லால் தாக்கி பெண் கொலை செய்த அவரது கணவருக்கு போலீஸ் வலைவீசி தேடி வருகிறார்கள்.;
தார்வார்:
தார்வார் மாவட்டம் சாகரா அருகே எடவாடா கிராமத்தை சேர்ந்தவர் காடியப்பா. இவரது மனைவி மஞ்சவவ்வா பாகத் (வயது 42). இவர்கள் விவசாயம் செய்து பிழைப்பு நடத்தி வந்தனர். இருப்பினும் மதுபோதைக்கு அடிமையான காடியப்பா அடிக்கடி வீட்டுக்கு குடிபோதையில் வந்து மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். அதுபோல் நேற்று முன்தினமும் தம்பதி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வழக்கம் போல் நேற்று காலை மஞ்சவவ்வா தோட்டத்திற்கு சென்று முள்ளங்கிகளை அறுவடை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு குடிபோதையில் வந்த காடியப்பா மஞ்சவவ்வாவுடன் தகராறு செய்துள்ளார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த காடியப்பா அங்கு கிடந்த கல்லால் மனைவியை தாக்கியுள்ளார். இதில் தலை உடைந்த மஞ்சவவ்வா சம்பவ இடத்திலேயே துடி, துடித்து பலியானார். இதையடுத்து அங்கிருந்து காடியப்பா தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய காடியப்பாவை வலைவீசி தேடி வருகிறார்கள். காடியப்பா கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பும் மனைவியை கொல்ல முயன்றார். இதில் போலீசாரால் கைது செய்யப்பட்டு 4 ஆண்டுகள் சிறையில் இருந்த அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் விடுதலை ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.