நடத்தையில் சந்தேகப்பட்டு 13 முறை கத்தியால் குத்தி பெண் கொலை: தற்கொலைக்கு முயன்ற கணவருக்கு தீவிர சிகிச்சை

நடத்தையில் சந்தேகப்பட்டு 13 முறை கத்தியால் குத்தி பெண் கொலை தற்கொலைக்கு முயன்ற கணவருக்கு தீவிர சிகிச்சை

Update: 2022-10-16 18:45 GMT

பெங்களூரு: பெங்களூரு அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு 13 முறை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு, கணவரும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நடந்துள்ளது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நடத்தையில் சந்தேகம்

பெங்களூரு புறநகர் மாவட்டம் சூழிபெலே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பில்லகுன்டே தொழிற்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி ஹர்ஷிதா (வயது 26). இந்த தம்பதிக்கு 7 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்திருந்தது, 2 குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையில், ஹர்ஷிதாவின் நடத்தையில் ரமேசுக்கு சந்தேகம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதுதொடர்பாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இதையடுத்து, தனது கணவருடன் வாழ பிடிக்காமல் ஹர்ஷிதா பிரிந்து சென்று விட்டார். கடந்த 10 நாட்களுக்கு முன்பாக தான் ஹர்ஷிதாவை சமாதானப்படுத்தி, ரமேஷ் வீட்டுக்கு அழைத்து வந்திருந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு உண்டானது. பின்னர் பேக்டரி கேட் பகுதியில் உள்ள ஒரு கடைக்கு ஹர்ஷிதாவை ரமேஷ் அழைத்து சென்றார்.

13 முறை கத்தியால் குத்தி...

அவ்வாறு செல்லும் போது திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஹர்ஷிதாவை கண்மூடித்தனமாக ரமேஷ் குத்தியதாக கூறப்படுகிறது. இதில், பலத்த கத்திக்குத்து காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். பின்னர் ரமேசும் தனது வயிறு உள்ளிட்ட பகுதிகளில் கத்தியால் குத்திக் கொண்டு உயிருக்கு போராடினார். இதுபற்றி தகவல் அறிந்ததும் சூழிபெலே போலீசார் விரைந்து வந்து தம்பதியை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். சிகிச்சை பலனின்றி ஹர்ஷிதா பரிதாபமாக இறந்து விட்டார்.

ரமேசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உயிருக்கு ஆபத்தில்லை என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். குடும்ப பிரச்சினை மற்றும் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொலை செய்துவிட்டு ரமேஷ் தற்கொலைக்கு முயன்றதாகவும், ஹர்ஷிதாவை 13 முறை கத்தியால் குத்தி இருந்ததாகவும் உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சூழிபெலே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்