கலபுரகி, பீதரில் கொட்டி தீர்த்த கனமழை; மின்னல் தாக்கி பெண் பலி

கலபுரகி, பீதரில் கொட்டிய கனமழையின்போது மின்னல் தாக்கி விளைநிலத்தில் வேலை செய்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 11 ஆடுகள் செத்தன.;

Update: 2023-09-03 23:07 GMT

பெங்களூரு:

கர்நாடகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு தலைநகர் பெங்களூருவில் கொட்டிய திடீர் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சுரங்க சாலைகளில் மழைநீர் தேங்கி வாகன ஓட்டிகள் இன்னல்களுக்கு ஆளாகினர்.

இந்த நிலையில் கலபுரகி, பீதர் ஆகிய மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது. நேற்று முன்தினம் இரவில் தொடங்கிய மழை, நேற்று காலை வரை கொட்டியது. கலபுரகி மாவட்டம் சித்தாப்புரா தாலுகா ராஜோலா கிராமத்தை சேர்ந்தவர் சிவப்பா. விவசாயி. இவர் தனக்கு சொந்தமான ஆடுகளை அருகில் உள்ள விளைநிலத்திற்கு அழைத்து சென்றார். அப்போது இடி-மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. அந்த சமயத்தில் மின்னல் தாக்கி அவருக்கு சொந்தமான 11 ஆடுகள் செத்தன. இதுகுறித்து அறிந்ததும் கிராம பஞ்சாயத்து அதிகாரிகள் வந்து ஆடுகளை பார்வையிட்டனர். மேலும் உரிய இழப்பீடு தருவதாக கூறிவிட்டு சென்றனர்.

இதேபோல் சிந்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் கலாவதி(வயது 35). இவர் அந்த பகுதியில் உள்ள விளைநிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது கனமழை கொட்டியது. அந்த சமயத்தில் மின்னல் தாக்கி, கலாவதி பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் வேலை செய்து கொண்டிருந்த மற்றொரு பெண் படுகாயம் அடைந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கலபுரகி டவுன் பகுதியில் இரவு முழுவதும் கொட்டிய கனமழையால் சாலைகளில் வெள்ளநீர் சூழ்ந்தது. மேம்பாலங்கள் அருகே இருந்த சுரங்க சாலைகள், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். டவுன் பகுதியில் உள்ள குழந்தைகள் விளையாட்டு பூங்கா உள்ளிட்ட பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. விடுமுறை தினம் என்றாலும், கனமழையால் மக்கள் அனைவரும் வீடுகளுக்குள் முடங்கினர். சரணபசவேஷ்வர் கோவிலுக்குள் மழைநீர் புகுந்தது. இதேபோல் யாதகிரி, பீதர் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது.

Tags:    

மேலும் செய்திகள்