மணிப்பூரில் உலகக் கோப்பை கொண்டாட்டத்தில் விபரீதம் - துப்பாக்கி குண்டு பாய்ந்து பெண் பலி
மணிப்பூரில், அர்ஜென்டினா பெற்ற வெற்றியை கொண்டாட யாரோ துப்பாக்கியால் சுட்டபோது தவறுதலாக குண்டு பாய்ந்ததில் பெண் ஒருவர் பலியானார்.;
இம்பால்,
மணிப்பூர் மாநிலம் இம்பால் மேற்கு மாவட்டத்தில் உள்ள சிங்ஜமே நகரத்தைச் சேர்ந்த பெண் இபேடோம்பி (வயது 50). இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் டி.வி.யில் உலகக் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியை பார்த்தபின்பு உறங்கச் சென்றார். அப்போது அவரது மார்பில் ஒரு துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது. அதில் படுகாயமடைந்த அந்தப் பெண், ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்து விட்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
போலீசார் நடத்திய விசாரணையில் அங்கு சுவரில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த தடயங்கள் காணப்பட்டன. உலகக் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் பிரான்சுக்கு எதிராக அர்ஜென்டினா பெற்ற வெற்றியை கொண்டாட யாரோ துப்பாக்கியால் சுட்டபோது தவறுதலாக அப்பெண் மீது குண்டு பாய்ந்ததாக கருதப்படுகிறது.
யார் அவ்வாறு துப்பாக்கியால் சுட்டார்கள் என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில், துப்பாக்கியால் சுட்டவர்களை கைது செய்யும்வரை, இறந்த பெண்ணின் உடலை திரும்பப் பெற மாட்டோம் என்று கூறி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.