கால்வாயில் மூழ்கி பெண் சாவு; காப்பாற்ற முயன்ற கணவனும் இறந்தார்
மைசூருவில், கால்வாயில் மூழ்கி பெண் பலியானார். அவரை காப்பாற்ற முயன்று கணவரும் உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது.
மைசூரு:
காதல் திருமணம்
மைசூரு தாலுகா மொகரஹள்ளிமண்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார்(வயது 30). இவரது மனைவி கவிதா(25). கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தான் இவர்களுக்கு திருமணம் நடந்தது. சிவக்கமார், கவிதாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். கடந்த 4-ந்தேதி தம்பதி 2 பேரும், வருணா கால்வாயில் துணி துவைக்க சென்றுள்ளனர்.
கவிதா துணி துவைக்க அவருக்கு உதவியாக சிவக்குமார் இருந்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தில் எதிர்பாராதவிதமாக கால்வாய்க்குள் கவிதா தவறி விழுந்து தத்தளித்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சிவக்குமார், கால்வாயில் குதித்து மனைவி கவிதாவை காப்பாற்ற முயன்றார். ஆனால் அவரால் காப்பாற்ற முடியவில்லை.
தம்பதி சாவு
இதனால் அடுத்தடுத்து 2 பேரும் கால்வாயில் மூழ்கி பலியானார்கள். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மாலை தம்பதிகளின் உடல்கள்ராமனஹள்ளி கிராமம் அருகே உள்ள கால்வாயில் மிதந்துள்ளன. இதுபற்றி தகவல் அறிந்த மைசூரு புறநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மைசூரு கே.ஆர்.ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், துணி துவைக்க வந்தபோது கால்வாயில் மூழ்கி தம்பதி பலியானது தெரியவந்தது. இதுகுறித்து மைசூரு புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.