பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; நள்ளிரவில் ஆயிரக்கணக்கான பெண்கள் போராட்டம்

மேற்கு வங்காளத்தில் பெண் டாக்டர் பலாத்கார வழக்கில் மாணவிகள், தொழில் செய்வோர் மற்றும் இல்லத்தரசிகள் என நள்ளிரவில் ஆயிரக்கணக்கான பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2024-08-14 21:53 GMT

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் கொல்கத்தா நகரின் வடபகுதியில் ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், கடந்த 9-ந்தேதி அதிகாலையில் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூர கொலை செய்யப்பட்டார். அரை நிர்வாண கோலத்தில் உயிரிழந்த நிலையில் அவருடைய உடல் கண்டெடுக்கப்பட்டது.

இதுபற்றிய 4 பக்க பிரேத பரிசோதனை அறிக்கையில், அவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது உறுதியாகி இருந்தது. அவரின் அந்தரங்க உறுப்புகள், வாய் உள்ளிட்ட பகுதிகளில் ரத்தம் வடிந்துள்ளது என்றும் பல்வேறு பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டு உள்ளன என்பதும் தெரிய வந்துள்ளது.

இதனால், அவர் கொடூர முறையில் பலாத்காரம் மற்றும் கொலை செய்யப்பட்டது உறுதியாகி உள்ளது. இந்த சம்பவத்தில் சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர், 23-ந்தேதி வரை போலீஸ் காவலில் வைக்கப்பட்டு உள்ளார். இதனை தொடர்ந்து, பல்வேறு பகுதிகளிலும் பயிற்சி டாக்டர்கள் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கொடூர சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மேற்கு வங்காளத்தின் தெருக்களில் ஆயிரக்கணக்கான பெண்கள் நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டம் இரவு 11.55 மணியளவில் தொடங்கியது. சுதந்திர தின கொண்டாட்டங்கள் ஒருபுறம் நடந்தபோதும், சிறிய மற்றும் பெரிய நகரங்களில் இருந்து மாணவிகள், தொழில் செய்வோர் மற்றும் இல்லத்தரசிகள் என பெண்கள் பலர் திரண்டு வந்திருந்தனர்.

அவர்கள் நீதி வேண்டும் என கோஷம் எழுப்பியபடி சென்றனர். சிலர் மெழுகுவர்த்திகளை ஏந்தியும், போஸ்டர்களை சுமந்தபடியும், மொபைல் போன்களில் ஒளியை எரிய விட்டபடியும் சென்றனர்.

இந்த போராட்டங்களுக்கு ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு இடங்களில் பெண்களுடன் ஆண்களும் நடந்து சென்றனர். போராட்டத்தின்போது மாற்றமும், நீதியும் வேண்டும் என்று அவர்கள் சுட்டி காட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்