பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; மத்திய மந்திரி நட்டாவுக்கு ஐ.எம்.ஏ. கடிதம்

மேற்கு வங்காளத்தில் பெண் டாக்டர் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில், டாக்டர்களின் போராட்டம் நாளையும் தொடரும் என பயிற்சி டாக்டர்களுக்கான கூட்டமைப்பின் தலைவர் கூறியுள்ளார்.

Update: 2024-08-12 17:27 GMT

புதுடெல்லி,

மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவின் வடபகுதியில் ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. அதன் கருத்தரங்கு அறையில் பயிற்சி பெண் டாக்டர் ஒருவர் கடந்த 9-ந்தேதி அரை நிர்வாண கோலத்தில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

2-ம் ஆண்டு மருத்துவ மேல்படிப்பு பயின்று வந்த அவர் பயிற்சி டாக்டராக பணியாற்றி வந்திருக்கிறார். 8-ந்தேதி இரவு பணியில் இருந்தபோது பலாத்காரம் செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இது தொடர்பாக கொல்கத்தா போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

பிரேத பரிசோதனை முடிவில் அவர் கொலை செய்யப்படுவதற்கு முன் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்தில் சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்தனர். சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை வைத்து பிற டாக்டர்களும் அந்த குற்றவாளியை அடையாளம் காட்டினர்.

இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் மருத்துவ துறையினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரி அவர்கள் போராட்டத்தில் இறங்கினர். இந்திய டாக்டர்கள் சங்கம், இன்று முதல் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.

அந்த மாணவியின் 4 பக்க பிரேத பரிசோதனை அறிக்கையில், அவரின் அந்தரங்க உறுப்புகள், வாய் உள்ளிட்ட பகுதிகளில் ரத்தம் வடிந்துள்ளது என்றும் பல்வேறு பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டு உள்ளன என்பதும் தெரிய வந்துள்ளது. 23-ந்தேதி வரை போலீஸ் காவலில் ராய் வைக்கப்பட்டு உள்ளார்.

இந்நிலையில், மத்திய சுகாதார மந்திரி ஜே.பி. நட்டாவுக்கு இந்திய மருத்துவ கூட்டமைப்பு (ஐ.எம்.ஏ.) கடிதம் ஒன்றை இன்று எழுதியுள்ளது.

அதில், இந்த சம்பவத்தில் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை வைத்ததுடன், பணியிடங்களில் மருத்துவர்களின், அதிலும் பெண் மருத்துவர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது.

இந்த விவகாரத்தில் பாகுபாடற்ற முழுமையான அளவிலான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பயிற்சி டாக்டர்களுக்கான கூட்டமைப்பின் தலைவரான ஏவிரல் மாத்தூர், மத்திய முகமையின் விசாரணை வேண்டும் மற்றும் பெண் டாக்டரின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதுடன், போராட்டம் நாளையும் தொடரும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்