கணவர் தொந்தரவு செய்ததால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை

ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட பணம் கேட்டு கணவர் தொந்தரவு செய்ததால் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.;

Update: 2023-09-21 20:59 GMT

ஹாசன்:-

ஆன்லைன் சூதாட்டம்

ஹாசன் மாவட்டம் சென்னராயப்பட்டணா தாலுகா இரேசாவே அருகே டி.தும்கூர் கிராமத்தை சேர்ந்தவர் பாரதி (வயது 24). இவருக்கும் மைசூருவை சேர்ந்த நவீன்குமார் என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்தின்போது பாரதியின் பெற்றோர் நகை, பணம் வரதட்சணையாக கொடுத்துள்ளனர்.

நவீன் குமார் ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையாகி இருந்ததாக தெரிகிறது. இதனால் அவர், ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்துள்ளார். மேலும் பலரிடம் நவீன்குமார் கடன் வாங்கி உள்ளார். இந்த நிலையில், நவீன்குமார், ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட பெற்றோரிடம் பணம் வாங்கி வரும்படி பாரதியை கொடுமைப்படுத்தி வந்ததாக தெரிகிறது. பாரதியிடம் வரதட்சணை கேட்டு உடல் அளவிலும், மனதளவிலும் நவீன்குமார் சித்ரவதை செய்து வந்துள்ளார். இதனால் பாரதி மன முடைந்து காணப்பட்டார்.

தற்கொலை

இந்த நிலையில், தனது தந்தையின் வீட்டுக்கு பாரதி வந்தார். அப்போதும், நவீன்குமார், பாரதியை தொடர்புகொண்டு பணம் கேட்டு தொந்தரவு செய்ததாக தெரிகிறது. இதனால் விரக்தி அடைந்த பாரதி, தனது

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் இரேசாவே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார், பாரதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், நவீன்குமார் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் பாரதி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதற்கிடையே பாரதியின் தந்தை, தனது மகள் சாவுக்கு நவீன்குமார் தான் காரணம் என இரேசாவே போலீசில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்