கணவரின் கள்ளத்தொடர்பால் விபரீதம்: 3 குழந்தைகளை கொன்று பெண் தற்கொலை

கணவரின் கள்ளத்தொடர்பால் 3 குழந்தைகளை கொன்றுவிட்டு பெண் தற்கொலை செய்துகொண்ட சோக சம்பவம் மண்டியா அருகே நடந்துள்ளது.

Update: 2022-12-02 18:45 GMT

மண்டியா:

கள்ளத்தொடர்பு

மண்டியா மாவட்டம் மத்தூர் தாலுகா ஹலேபேடி பகுதியை சேர்ந்தவர் அகில் அகமது. இவரது மனைவி உஸ்னா கவுசர் (வயது 30). இந்த தம்பதியின் மகன் ஹரீஸ் (7), மகள்கள் அலிஷா (4), அனம் பாத்திமா (2). உஸ்னா கவுசர் அந்தப்பகுதியில் உள்ள தனியார் கிளினிக்கில் வேலை பார்த்து வந்தார்.

அகில் அகமது ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டணாவில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். அப்போது அகில் அகமதுவுக்கும், அந்தப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது.

இதனால் அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் உஸ்னா கவுசர், அகில் அகமதுவின் செல்போனை பார்த்தபோது, அதில் கணவர் வேறொரு பெண்ணுடன் நிர்வாணமாக இருந்த படங்கள் இருந்தன.

கொலை-தற்கொலை

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உஸ்னா கவுசர், இதுபற்றி அகில் அகமதுவிடம் கேட்டுள்ளார். மேலும் அந்த பெண்ணுடனான கள்ளத்தொடர்பை கைவிடும்படியும் அகில் அகமதுவை உஸ்னா கவுசர் கண்டித்துள்ளார். ஆனால் அவர் கள்ளத்தொடர்பை கைவிடவில்லை என தெரிகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதற்கிடையே குடும்பத்தினர் அவர்களை சமாதானம் செய்து வைத்தனர்.

ஆனாலும் அகில் அகமது, அந்த பெண்ணுடன் கள்ளத்தொடர்பை தொடர்ந்துள்ளார். இதனால் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக வாழ்க்கையில் விரக்தி அடைந்த உஸ்னா கவுசர், குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார்.

அதன்படி நேற்று காலை உணவில் விஷத்தை கலந்து தனது நெஞ்சை கல்லாக்கி கொண்டு அதனை குழந்தைகளுக்கு கொடுத்தார். அதனை சாப்பிட்ட 3 குழந்தைகளும் அடுத்தடுத்து சுருண்டு விழுந்து உயிரிழந்தன. இதையடுத்து உஸ்னா கவுசர், தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

சோகம்

இந்த நிலையில் வீட்டுக்குள் 4 பேரும் பிணமாக கிடப்பதை பார்த்த அக்கம்பக்கத்தினர், இதுபற்றி மத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் 4 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே அகில் அகமதுவும், அவரது குடும்பத்தினரும் தலைமறைவாகி உள்ளனர். உஸ்னா கவுசரின் பெற்றோர், அகில் அகமது மற்றும் அவரது குடும்பத்தினர் மீது மத்தூர் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்