அவசர கால ஜன்னல் வழியாக ஏறி ரெயிலில் இடம்பிடித்த பெண் - வைரலாகும் வீடியோ
வீடியோவில் தண்டவாளத்திற்கு இருபுறமும் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.;
உஜ்ஜைனி,
வழக்கமாகவே முன்பதிவில்லா ரெயில் பெட்டிகளில் இடம் பிடிக்க போட்டா போட்டி இருக்கும். அதுவும் திருவிழா காலங்கள், முகூர்த்த நாட்கள் வந்துவிட்டால், கூட்டம் அதிகமாகி நிலைமை இன்னும் மோசமாகும். அந்த நேரங்களில் ரெயில்களில் வாக்குவாதங்களையும், சண்டை காட்சிகளையும் பரவலாக பார்க்க முடியும்.
ஏனென்றால் முன்பதிவு இருக்கைகள் நிரம்பிய பின்பு, அவசர கதியில் கிளம்பும் பயணிகள், ரெயிலில் ஒதுக்கப்பட்டுள்ள ஓரிரு முன்பதிவில்லா பெட்டிகளில் இருக்கைகளுக்கு போட்டியிடுவதே இந்த நெருக்கடிக்கு காரணமாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இளம்பெண் ஒருவர் ரெயிலில் அவசர கால ஜன்னல் கதவு வழியாக ரெயிலுக்குள் நுழையும் வீடியோ காட்சி, தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த காட்சி மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனி ரெயில் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
அந்த வீடியோவில் பிளாட்பாரத்தில் நிற்க இடம் இல்லாத அளவில் கூட்டம் நிரம்பி வழிகிறது. தண்டவாளத்திற்கு இருபுறமும் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. பலர் ரெயில் வந்து நின்றதும் முண்டியடித்து ஏறி இடம் பிடிக்க போட்டி போடுகின்றனர். இந்த சூழ்நிலையில்தான் இளம்பெண் ஜன்னல் வழியாக ரெயிலுக்குள் நுழைகிறார்.
இந்த காட்சிகள் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பிட்ட வழித்தடத்தில் அன்று அதிகமான ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதுதான் இந்த நெருக்கடிக்கு காரணம் என்று ஒருவர் கருத்து தெரிவித்து இருந்தார். இந்த வீடியோவை பார்த்த பொதுமக்கள் பயணிகளின் தேவை அறிந்து கூடுதல் ரெயில்களை இயக்க ரெயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.