கள்ளத்தொடர்பை கண்டித்த மனைவியை தீ வைத்து எரித்துக்கொன்ற கணவன் - மகள்களுக்கும் தீ வைத்த கொடூரம்

2 மகள்களும் 90 சதவிகித தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.;

Update: 2022-10-02 10:18 GMT

மும்பை,

மராட்டிய மாநிலம் தானே மாவட்டம் பூபர் பகுதியை சேர்ந்தவர் பிரசாத் (வயது 40). இவருக்கும் பிரீத்தி (வயது 35) என்ற மனைவியும் சமீரா (வயது 14), சமிக்‌ஷா (வயது 11) என 2 மகள்களும் உள்ளனர்.

இதனிடையே, பிரசாத்திற்கு வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதை பிரசாத்தின் மனைவி பிரீத்தி மற்றும் மகள்கள் கண்டித்துள்ளனர். மேலும், அந்த பெண்ணுடனான தொடர்பை கைவிடும்படி பிரீத்தி தனது கணவரை வலியுறுத்தியுள்ளார். இதனால், கணவன் - மனைவி இடையே அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கள்ளத்தொடர்பை கண்டித்து அந்த பெண்ணுடனான தொடர்பை கைவிடும்படியும் பிரீத்தி கடந்த வெள்ளிக்கிழமை இரவு தனது கணவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர், நேற்று அதிகாலை 5.30 மணியளவில் பிரீத்திக்கும் பிரசாத்திற்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த பிரசாத் தனது மனைவி பிரீத்தி மற்றும் மகள்கள் சமீரா, சமிக்‌ஷா மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இதில், பிரீத்தி மற்றும் 2 மகள்களும் படுகாயமடைந்தனர். தீ வைத்த பிரசாத்தின் உடலிலும் தீ பிடித்துள்ளது.

தீ பற்றி எரிந்த இவர்களின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக விரைந்து வந்து அனைவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால், கடுமையான தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட பிரீத்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மகள்கள் சமீரா, சமிக்‌ஷா 90 சதவிகித தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மனைவி மற்றும் மகள்களுக்கு தீ வைத்த கொடூர பிரசாத் தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்