மின்சார ரெயிலில் டிக்கெட் பரிசோதகரின் கையை கடித்த பெண்

காயமடைந்த டிக்கெட் பரிசோதர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Update: 2024-04-14 14:50 GMT

மும்பை,

மும்பையில் இருந்து விரார் நோக்கி ஏ.சி மின்சார ரெயில் ஒன்று நேற்று முன்தினம் மதியம் 1.30 மணி அளவில் புறப்பட்டு சென்றது. தகிசர் - மிராரோடு இடையே ரெயில் சென்ற போது அங்குள்ள ஒரு ரெயில் பெட்டியில் அதிரா சுரேந்திரநாத் (வயது26) என்ற பெண் டிக்கெட் பரிசோதகர், பயணிகளிடம் சோதனை மேற்கொண்டார். அப்போது ரெயில் பெட்டியில் இருந்த நைகாவை சேர்ந்த சிங் என்ற பெண் பயணியிடம், டிக்கெட் பரிசோதகர் டிக்கெட் கேட்டார்.

அவரது கணவர் சச்தேவ் வாட்ஸ்அப்பில் அனுப்பிய டிக்கெட்டை அந்தப்பெண் காண்பித்தார். இந்த டிக்கெட் செல்லுபடியாகாது என தெரிவித்த டிக்கெட் பரிசோதகர் மிராரோடு ரெயில் நிலையத்தில் அவரை இறங்குமாறு தெரிவித்தார். இதனால் 2 பேருக்கும் வாய்தகராறு ஏற்பட்டது.

இதனையடுத்து ஆத்திரமடைந்த பெண் பயணி சிங் ரெயில் நிலையம் வந்ததும், டிக்கெட் பரிசோதகர் அதிரா சுரேந்திரநாத்தின் கையை கடித்து விட்டு தப்பிக்க முயன்றார். இதனால் டிக்கெட் பரிசோதகர் சத்தம் போட்டதை அடுத்து மற்ற பயணிகள் அந்தப்பெண்ணை பிடித்து வசாய் ரெயில்வே போலீசில் ஒப்படைத்தனர். காயமடைந்த டிக்கெட் பெண் பரிசோதகருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசார் டிக்கெட் பரிசோதகரின் கையை கடித்த பெண் பயணி சிங் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்