கள்ளக்காதலனுடன் செல்ல தடையாக இருந்ததால் இரண்டு குழந்தைகளை கழுத்தை நெரித்து கொன்ற கொடூர தாய்
கள்ளக்காதலனுடன் செல்ல விரும்பியதாகவும் அதற்கு குழந்தைகள் தடையாக இருந்ததால் அவர்களை கழுத்தை நெரித்து கொன்றதாகவும் அந்த பெண் தெரிவித்தார்.;
ராய்கர்,
மராட்டிய மாநிலம் ராய்கரில் கள்ளக்காதலனுடன் செல்ல தடையாக இருந்ததால் பெண் ஒருவர் தனது குழந்தைகளை கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிஹிம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஷீத்தல் போலே (25 வயது). இவருக்கு ஆராத்யா (5 வயது) என்ற மகளும், சர்தக் (3 வயது) என்ற மகனும் இருந்தனர். இந்த நிலையில் கடந்த மார்ச் 31-ந்தேதி இரவு வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய ஷீத்தலின் கணவர் சதானந்த், குழந்தைகள் இருவரும் மயங்கிய நிலையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து ஷீத்தலிடம் கேட்டபோது, குழந்தைகள் இருவரும் தூங்குவதாக அவர் கூறியுள்ளார். இதையடுத்து குழந்தைகளை சதானந்த் எழுப்பினார். அவர்கள் எழும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த சதானந்த் அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் அங்கு குழந்தைகள் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் ஷீத்தலுக்கு, சாய்நாத் ஜாதவ் என்பவருடன் தொடர்பு இருந்ததாகவும் இதனால் அவருக்கும் அவரது கணவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததும் தெரியவந்தது. மேலும், ஷீத்தலிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, அவர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தார். தொடர்ந்து போலீசார் விசாரித்ததில், அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
தனது கள்ளக்காதலனுடன் செல்ல விரும்பியதாகவும் அதற்கு குழந்தைகள் தடையாக இருந்ததால் அவர்களை கழுத்தை நெரித்து கொன்றதாகவும் ஷீத்தல் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.