பெருநிறுவனங்களில் தொடரும் ஆட்குறைப்பு நடவடிக்கை; 452 ஊழியர்களை பணி நீக்கம் செய்த 'விப்ரோ'
கடந்த சில மாதங்களாக பெரு தொழில்துறை நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுடெல்லி,
கொரோனா வைரஸ், உக்ரைன் - ரஷியா போர், கச்சா எண்ணெய் விநியோகம், அரசியல் நிலைத்தன்மை, உற்பத்தி - நுகர்வு இடையேயான வேறுபாடு உள்பட பல்வேறு காரணங்களால் கடந்த சில ஆண்டுகளாக உலக பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, 2023-ம் ஆண்டில் 3-ல் 1 பங்கு உலக பொருளாதாரம் மந்த நிலையை சந்திக்கும் என்று ஐஎம்எப் எனப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜிவா இந்த ஆண்டு தொடக்கத்தில் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதனை தொடர்ந்து பல்வேறு பெருநிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்து பணி நீக்க அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன.
அந்த வகையில், உலகம் முழுவதும் உள்ள தங்கள் ஊழியர்களில் 10 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய உள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. அதேபோல், அமெரிக்காவின் பிரபல முதலீட்டு வங்கி, நிதி சேவை நிறுவனமான கோல்ட்மென் சச்ஸ் சுமார் 3 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், அமேசான் நிறுவனமும் தங்கள் ஊழியர்களில் கணிசமான அளவிற்கு பணி நீக்கம் செய்யும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
அதேபோல், கூகுள் தாய் நிறுவனமான ஆல்பாபெட் 12 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக நேற்று அறிவித்தது.
இந்நிலையில், இந்தியாவின் பிரபல ஐ.டி. நிறுவனமான விப்ரோ தங்கள் ஊழியர்களில் 452 பேரை இன்று பணி நீக்கம் செய்துள்ளது.
இந்தியா முழுவதும் தங்கள் நிறுவனத்தில் புதிதாக சேர்ந்த ஊழியர்களில் இண்டர்னல் தேர்வில் தோல்வியடைந்து குறைவான செயல் திறனை வெளிப்படுத்திய 452 பேரை விப்ரோ பணி நீக்கம் செய்துள்ளது. அதேவேளை, தங்கள் நிறுவனத்தில் சேர்வதற்காக ஊழியர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிக்கான கட்டண தொகை ரூ.75 ஆயிரத்தை பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் செலுத்தவேண்டியதில்லை. அந்த தொகை விப்ரோ தள்ளுபடி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் ஐடி நிறுவனங்கள், பெருநிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.