எலகங்காவை தக்க வைப்பாரா எஸ்.ஆர்.விஸ்வநாத்?

Update: 2023-05-02 22:11 GMT

பெங்களூருவில் உள்ள 28 தொகுதிகளில் எலகங்காவும் ஒன்று. இந்த தொகுதியில் சர்வதேச விமான நிலையம், உயர்தரமான மருத்துவமனைகள், மேம்படுத்தப்பட்ட சாலை வசதி, கல்லூரிகள், 25 கிராம பஞ்சாயத்துக்களை உள்ளடக்கிய பகுதியாகும்.

இந்த தொகுதியில் 1962-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை 13 தேர்தல்கள் நடந்துள்ளன. இதில் 7 தடவை காங்கிரஸ் கட்சியும், ஜனதா பரிவார் 2 தடவையும், பா.ஜனதா 3 தடவையும், சுயேச்சை ஒரு தடவையும் வெற்றி வாகை சூடியுள்ளன. இந்த தொகுதியில் மொத்தம் 4 லட்சத்து 27 ஆயிரத்து 164 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 2 லட்சத்து 17 ஆயிரத்து 710 ஆண்களும், 2 லட்சத்து 9 ஆயிரத்து 374 பெண்களும், 3-ம் பாலினத்தினர் 80 பேரும் அடங்குவர். இந்த தொகுதியில் அனைத்து மதம், மொழி, இனத்தினரும் வசித்து வருகிறார்கள்.

ஆரம்பக்காலத்தில் இந்த தொகுதி காங்கிரஸ் கட்சி செல்வாக்குடன் திகழ்ந்தது. ஆனால் கடந்த 2008, 2013, 2018-ம் ஆண்டு தேர்தல்களில் பா.ஜனதா வெற்றிக்கொடி நாட்டி, தங்களது கோட்டையாக பாதுகாத்து வருகிறது. கடந்த 3 தடவையும் இங்கே பா.ஜனதாவை சேர்ந்த எஸ்.ஆர்.விஸ்வநாத் எம்.எல்.ஏ.வாக உள்ளார். இவர் உள்ளூர் கட்சிக்காரர்களை மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக காண முடிகிறது. அதேப் போல் எம்.எல்.ஏ.வின் மனைவி தலையீடு அதிகம் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் பெங்களூரு வளர்ச்சி ஆணைய (பி.டி.ஏ.) தலைவராக இருக்கும் எஸ்.ஆர்.விஸ்வநாத், மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த தொகுதியில் 206 கிராமங்களில் ஒக்கலிக சமுதாய மக்கள் வசிக்கிறார்கள். கடந்த 3 தேர்தல்களில் காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் ஒக்கலிக சமுதாயத்தை சேர்ந்தவரை வேட்பாளர்களாக களமிறக்கியது. இதனால் ஓட்டுகள் பிரிந்து பா.ஜனதா வெற்றிக்கு வழிவகுத்தது என்று அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள். இந்த தொகுதியில் பா.ஜனதா சார்பில் மீண்டும் எஸ்.ஆர்.விஸ்வநாத் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து முனேகவுடாவை ஜனதாதளம் (எஸ்) கட்சி வேட்பாளராக நிறுத்தியுள்ளது. காங்கிரஸ் சார்பில் கேசவ ராஜண்ணா களமிறங்கியுள்ளார். இந்த தொகுதியில் கடந்த 10 ஆண்டுளாக பல லட்சம் ரூபாய் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளை எஸ்.ஆர்.விஸ்வநாத் செய்துள்ளார். இது அவருக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. ஆனால் அவர் தொகுதியில் உள்ள பா.ஜனதாவினரை அனுசரித்து செல்லாதது, பி.டி.ஏ.வில் ஊழல் குற்றச்சாட்டு அவருக்கு பாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்தே, காங்கிரஸ் மற்றும் ஜனதாதளம்(எஸ்) கட்சி வேட்பாளர்கள் எஸ்.ஆர்.விஸ்வநாத்துக்கு எதிராக தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். அவரை வீழ்த்தி இந்த தொகுதியில் வெற்றிக்கனியை ருசிக்க காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கடம்சி வேட்பாளர்கள் தீவிர களப்பணியாற்றி வருகிறார்கள். ஏற்கனவே 3 முறை தொடர்ந்து வெற்றி பெற்றுள்ள எஸ்.ஆர்.விஸ்வநாத் மீண்டும் வெற்றியை ருசிப்பாரா? என்பதற்கான விடை வருகிற 15-ந்தேதி தெரிந்துவிடும்.

கடந்த தேர்தல்களில் வெற்றி-தோல்வி நிலவரம்

எலகங்கா தொகுதியில் 1962-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை நடந்த தேர்தல் முடிவுகள் பின்வருமாறு:-

ஆண்டு வெற்றி தோல்வி

1962 ராமகிருஷ்ணா(காங்.)-17,217 பாலசுந்தரம்(ஆர்.இ.பி.)-5,403

1967 நாராயணசாமியப்பா(சுயே.)-16,307 கே.வி.பி.கவுடா (காங்.)-15,4046

1972 சூர்யநாராயணகவுடா (காங்)-18,751 ராமசந்திரரெட்டி (என்.சி.ஓ.)-8,793

1978 பசவலிங்கப்பா(காங்.(இ))-33,662 முனிசின்னப்பா(ஜனதாகட்சி)-28,587

1983 சீனிவாசன்(ஜனதாகட்சி)-43,851 பசவலிங்கப்பா(காங்.)-31,783

1985 பசவலிங்கப்பா(காங்.)-47,302 சிவராஜ் (ஜனதாகட்சி)-40,960

1989 பசவலிங்கப்பா(காங்.)-70,882 சிவராஜ் (ஜனதாதளம்)-47,520

1994 ஜெயப்பிரகாஷ் நாராயணன்(ஜ.தளம்)-63,776 பிரசன்னகுமார் (காங்.)-61,755

1999 பிரசன்னகுமார்(காங்.)-1,24,593 முனியப்பா (பா.ஜ.க.)-85,108

2004 பிரசன்னகுமார்(காங்.)-1,44,806 முனிகிருஷ்ணா(பா.ஜ.க.)-1,30,494

2008 எஸ்.ஆர்.விஸ்வநாத்(பா.ஜ.க.)-60,975 சந்திரப்பா(காங்.)-44,953

2013 எஸ்.ஆர்.விஸ்வநாத்(பா.ஜ.க.)-75,507 சந்திரப்பா(ஜ.தளம்-எஸ்)-57,110

2018 எஸ்.ஆர்.விஸ்வநாத்(பா.ஜ.க.)-1,20,110 ஹனுமந்தகவுடா(ஜ.தளம்-எஸ்)-77,607

Tags:    

மேலும் செய்திகள்