வருணாவில் சித்தராமையா ஆதிக்கம் செலுத்துவாரா?

சட்டசபை தேர்தலில் வருணாவில் சித்தராமையா ஆதிக்கம் செலுத்துவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Update: 2023-04-13 20:30 GMT

கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சி ஆட்சிக்கு வரும் என்று மக்கள் எதிர்பார்த்து வருவது போன்று, வருணா தொகுதியில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. ஆம் கர்நாடக வரலாற்றை புரட்டிபோடும் வகையில் இந்த தேர்தல் உள்ளது. அதிலும் குறிப்பாக வருணா தொகுதியில் வெற்றி வாகையை சூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொகுதியை பொறுத்தவரையில் லிங்காயத் மக்கள் அதிகளவு வசித்து வருகின்றனர். 2008-ம் ஆண்டுக்கு பிறகு தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு சாமுண்டீஸ்வரி தொகுதியில் இருந்து பிரித்து வருணா தொகுதி உருவாக்கப்பட்டது. 2008-ம் ஆண்டு முதல் இன்றுவரை வருணா தொகுதி சித்தராமையாவின் கோட்டையாக இருந்து வருகிறது. முதன் முதலில் 2008-ம் ஆண்டு சித்தராமையா, வருணா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து 2013-ம் ஆண்டு அதே தொகுதியில் மீண்டும் போட்டியிட்டார். அப்போது பா.ஜனதா கட்சியில் இருந்து எடியூரப்பா விலகி தனி கட்சி தொடங்கியிருந்தார். இது சித்தராமையாவிற்கு சாதகமாக அமைந்தது. மீண்டும் அவர் வெற்றி பெற்றார். இதையடுத்து 2018-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தனது தனது மகன் யதீந்திராவுக்கு வருணா தொகுதியை விட்டு கொடுத்துவிட்டு சாமுண்டீஸ்வரி தொகுதியில் களமிறங்கினார். வருணாவில் யதீந்திரா வெற்றி பெற்றாலும், சாமுண்டீஸ்வரியில் சித்தராமையா தோல்வியை தழுவினார்.

தற்போது மீண்டும் வருணாவில் சித்தராமையா போட்டியிடுகிறார். அவரை முடக்கவும், பலமான வேட்பாளரை நிறுத்தவும் பா.ஜனதா திட்டமிட்டது. எடியூரப்பாவின் மகன் விஜயேந்திராவை வருணாவில் போட்டியிட வைக்க திட்டமிட்டப்பட்டது. ஆனால் அதற்கு எடியூரப்பா மறுத்துவிட்டார். இதையடுத்து லிங்காயத்தில் செல்வாக்கு மிக்க சோமண்ணாவை அங்கு வேட்பாளராக பா.ஜனதா நிறுத்தி உள்ளது.

வருணா தொகுதியில் 70 ஆயிரம் லிங்காயத் வாக்குகளும், சித்தராமையாவை சார்ந்த குருபா மக்களின் 35 ஆயிரம் வாக்குகள, பட்டியலின மக்களின் 43 ஆயிரம் வாக்குகள், 23 ஆயிரம் பழங்குடியின மக்களின் வாக்குகள், 12 ஆயிரம் ஒக்கலிகர்களின் வாக்குகள் உள்ளன. இந்த தொகுதியில் ெவற்றி-தோல்வியை தீர்மானிப்பது லிங்காயத் மக்களின் வாக்குகள் தான். இதனால் லிங்காயத் வாக்குகளை நம்பி அந்த சமுதாயத்தின் பலம் வாய்ந்த தலைவரான சோமண்ணாவை பா.ஜனதா சித்தராமையாவுக்கு எதிராக நிறுத்தி உள்ளது. இருவருக்கும் அங்கு சமபலம் உள்ளது. இதனால் வருணாவில் யார் வெற்றி பெறுவார்கள் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சித்தராமையா வருணாவில் ஆதிக்கம் செலுத்துவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Tags:    

மேலும் செய்திகள்