யமகனமரடியில் 4-வது வெற்றியை பெறுவாரா சதீஸ் ஜார்கிகோளி?

Update: 2023-05-06 22:34 GMT

பெலகாவி மாவட்டத்தில் உள்ள சிறிய சட்டசபை தொகுதி யமகனமரடி. கடந்த 2008-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பின்படி யமகனமரடி சட்டசபை தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டது.

யமகனமரடி தொகுதியில் இதுவரை 2008, 2013 மற்றும் 2018-ம் ஆண்டுகளில் என 3 சட்டசபை ேதா்தல்கள் நடந்துள்ளது. இந்த 3 தேர்தல்களிலும் காங்கிரசின் செயல் தலைவராக இருக்கும் சதீஸ் ஜார்கிகோளி வெற்றி பெற்றுள்ளார். யமகனமரடி தொகுதி காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக உள்ளது. எஸ்.டி. தொகுதியாக உள்ள இங்கு பழங்குடியின மக்கள் அதிகளவு வசித்து வருகிறார்கள். வேட்பாளர்களின் வெற்றி-தோல்வியை நிர்ணயிப்பவர்களாக பழங்குடியினரின் வாக்குகள் உள்ளது. மூடநம்பிக்கைக்கு எதிராக உள்ள காங்கிரசின் சதீஸ் ஜார்கிகோளி, யமகனமரடி தொகுதியில் மக்கள் செல்வாக்கு மிக்க தலைவராக உள்ளார்.

யமகனமரடி தொகுதியில் கடந்த 2008-ம் ஆண்டு நடந்த முதல் முறையாக சட்டசபை தேர்தலில் சதீஸ் ஜார்கிகோளி காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் போட்டியிட்ட பாலகவுடா பட்டீலை 16,781 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார். சதீஸ் ஜார்கிகோளி 46,132 வாக்குகளும், பாலகவுடா பட்டீல் 29,351 வாக்குகளும் பெற்றிருந்தனர்.

2013-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் அதே தொகுதியில் சதீஸ் ஜார்கிகோளி போட்டியிட்டு 2-வது முறையாக வெற்றி பெற்றார். அவர் 70,726 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து பா.ஜனதா சார்பில் போட்டியிட்ட அஸ்டகி மாருதி மல்லப்பா 46,376 வாக்குகள் பெற்றார். வாக்கு வித்தியாசம் 24,356 ஆகும்.

2018-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு சதீஸ் ஜார்கிகோளி 'ஹாட்ரிக்' வெற்றியை பதிவு செய்தார். அவர் 73,512 வாக்குகள் பெற்று 2,850 வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜனதா சார்பில் போட்டியிட்ட அஸ்டகி மாருதி மல்லப்பாவை (70,662 வாக்குகள்) வீழ்த்தி வெற்றி வாகை சூடினார்.

தற்போது நடக்க உள்ள சட்டசபை தேர்தலிலும் சதீஸ் ஜார்கிகோளி மீண்டும் காங்கிரஸ் சார்பில் யமகனரமரடி தொகுதியில் போட்டியிடுகிறார். பா.ஜனதா சார்பில் கடந்த 2 முறை தோல்வியை தழுவிய அஸ்டகி மாருதி மல்லப்பா 'சீட்' கேட்டு வந்தார். ஆனால் பா.ஜனதா மேலிடம் அவருக்கு டிக்கெட் கொடுக்க மறுத்து பசவராஜ் ஹூந்த்ரி என்பவருக்கு வாய்ப்பு உள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த அஸ்டகி மாருதி மல்லப்பா, பா.ஜனதாவில் இருந்து விலகி ஜனதாதளம்(எஸ்) கட்சியில் சேர்ந்தார். அவர் ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் இந்த முறை யமகனமரடி தொகுதியில் போட்டியிடுகிறார்.

சதீஸ் ஜார்கிகோளி 3 முறை தொடர்ந்து எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். இதனால், அவர் தனது தொகுதியில் ஏராளமான வளர்ச்சி பணிகளை செய்துள்ளார். இது அவருக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. அவர் தொகுதியில் காங்கிரஸ் ஆட்சியில் செய்த நலத்திட்டங்கள் பற்றியும், பா.ஜனதா அரசின் மோசமான செயல்பாடுகள் பற்றியும் கூறி வாக்கு சேகரித்து வருகிறார். மூடநம்பிக்கைக்கு எதிராக விளங்கும் சதீஸ் ஜார்கிகோளி, ராகு காலத்தில் தான் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

அதேநேரத்தில் பா.ஜனதா சார்பில் கடந்த 2 முறை போட்டியிட்டு தோல்வி அடைந்த அஸ்டகி மாருதி மல்லப்பா அக்கட்சியில் இருந்து விலகியதால், யமகனமரடி தொகுதியில் பா.ஜனதாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம். பா.ஜனதா மற்றும் ஜனதாதளம்(எஸ்) கட்சி வேட்பாளர்களும் அங்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். காங்கிரசின் செயல் தலைவராக இருக்கும் சதீஸ் ஜார்கிகோளியை இந்த முறை யமகனமரடி தொகுதியில் வீழ்த்த பா.ஜனதா கட்சி வியூகம் அமைத்து வருகிறது. எதிர்க்கட்சிகளின் வியூகங்களை உடைத்தெறிந்து சதீஸ் ஜார்கிகோளி, யமகனமரடி தொகுதியில் 4-வது வெற்றியை பெறுவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

கடந்த தோ்தல்களில் வெற்றி-தோல்வி நிலவரம்

யமகனமரடி சட்டசபை தொகுதியில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை 3 சட்டசபை தேர்தல்கள் நடந்துள்ளன. அதுபற்றிய விவரம் பின்வருமாறு:-

ஆண்டு வெற்றி தோல்வி

2008 சதீஸ் ஜார்கிகோளி(காங்.)-46,132 பாலகவுடா பட்டீல்(ஜ.தளம்-எஸ்)-29,351

2013 சதீஸ் ஜார்கிகோளி(காங்.)-70,726 அஸ்டகி மாருதி மல்லப்பா(பா.ஜ.க.)-46,376

2018 சதீஸ் ஜார்கிகோளி(காங்.)-73,512 அஸ்டகி மாருதி மல்லப்பா(பா.ஜ.க.)-70,662

Tags:    

மேலும் செய்திகள்