'மக்களவை தேர்தலில் போட்டியிட மாட்டேன்' - இமாச்சல பிரதேச காங்கிரஸ் தலைவர் பிரதீபா அறிவிப்பு

சூழ்நிலை சாதகமாக இல்லாததால் மக்களவை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என பிரதீபா அறிவித்துள்ளார்.

Update: 2024-03-20 13:26 GMT

சிம்லா,

இமாச்சல பிரதேசத்தில் முதல்-மந்திரி சுக்வீந்தர் சிங் சுகு தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இதனிடையே கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுவதற்காக கடுமையாக உழைத்த கட்சி நிர்வாகிகளுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படவில்லை என அக்கட்சியின் மாநில தலைவர் பிரதீபா சிங் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

இமாச்சல பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரி வீரபத்ர சிங்கின் மனைவியும், பொதுப்பணித்துறை மந்திரி விக்ரமாதித்ய சிங்கின் தாயாருமான பிரதீபா சிங், தற்போது மண்டி தொகுதி எம்.பி.யாக பதவி வகித்து வருகிறார். அவர் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் மண்டி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், 2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என பிரதீபா சிங் அறிவித்துள்ளார். தனது முடிவு குறித்து காங்கிரஸ் தலைமையிடம் தெரியப்படுத்தி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதே சமயம் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு முழு ஆதரவை வழங்க இருப்பதாக பிரதீபா சிங் கூறியுள்ளார். தனது முடிவு குறித்து பிரதீபா சிங் கூறுகையில், "மாநிலம் முழுவதும் பயணம் செய்ததில் கட்சி தொண்டர்கள் யாருக்கும் செயலாற்றும் உத்வேகம் இல்லை என்பதை தெரிந்து கொண்டேன். இத்தகைய சூழலில் போட்டியிட்டு வெற்றி பெறுவது கடினம்" என்று தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்