காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மந்திரி கே.ஜே.ஜார்ஜ், கடந்த 1985-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் முதன்முறையாக காங்கிரஸ் சார்பில் பெங்களூரு பாரதிநகர் தொகுதியில் கே.ஜே.ஜார்ஜ் களம் இறங்கினார்.
அப்போது அவரை எதிர்த்து ஜனதா கட்சியை சேர்ந்த மைக்கேல் பி.பெர்னாண்டஸ் போட்டியிட்டார். இந்த தேர்தலில் 3,946 வாக்குகள் வித்தியாசத்தில் கே.ஜே.ஜார்ஜ் வெற்றிபெற்றார். மைக்கேல் பி.பெர்னாண்டஸ் 18,195 வாக்குகளையும், கே.ஜே.ஜார்ஜ் 22,141 வாக்குகளையும் பெற்றிருந்தனர். அதைத்தொடர்ந்து 1989-ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் அதே பாரதிநகர் தொகுதி வேட்பாளராக அவர் நிறுத்தப்பட்டார். இதில் 36,198 வாக்குகளை பெற்ற கே.ஜே.ஜார்ஜ், 23,811 வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வேட்பாளர் சூர்யாநாரயண ராவை (12,387 ஓட்டுகள்) வீழ்த்தினார். 1994-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக முன்னாள் முதல்-மந்திரி பங்காரப்பா அந்த கட்சியில் இருந்து விலகி கர்நாடக காங்கிரஸ் என்ற கட்சியை தொடங்கினார்.
அப்போது அந்த கட்சியில் தன்னை இணைத்துக்கொண்ட கே.ஜே.ஜார்ஜ் மீண்டும் அதே தொகுதியில் கர்நாடக காங்கிரஸ் சார்பில் களமிறங்கினார். இதில் ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்ட ராஜண்ணாவிடம்(20,232 ஓட்டுகள்) 12,590 வாக்குகள் வித்தியாசத்தில் கே.ஜே.ஜார்ஜ்(7,642) தோல்வியை தழுவினார். மேலும் அந்த தேர்தலில் படுமோசமாக 5-வது இடத்திற்கு கே.ஜே.ஜார்ஜ் தள்ளப்பட்டார். அதைதொடர்ந்து அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த கே.ஜே.ஜார்ஜ் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். அதன்பின்னர் 2008-ம் நடைபெற்ற தேர்தலில் அவர் மீண்டும் காங்கிரஸ் சார்பில் களம் இறங்கினார்.
பாரதிநகர் தொகுதி மறுசீரமைப்பு செய்து சர்வக்ஞநகர் தொகுதியாக மாற்றப்பட்டது. 2008-ம் ஆண்டு நடந்த தேர்தலில் சர்வக்ஞநகர் தொகுதியில் போட்டியிட்ட கே.ஜே.ஜார்ஜ் 45,488 வாக்குகள் பெற்று வெற்றி வாகை சூடினார். அவரை எதிர்த்து பா.ஜனதா சார்பில் நின்ற சங்கர் 22,880 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். வாக்கு வித்தியாசம் 22,608 ஆகும். 2013-ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்ட கே.ஜே.ஜார்ஜ் 22,853 வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜனதா வேட்பாளர் பத்மநாப ரெட்டியை வீழ்த்தினார். 69,673 வாக்குகளை கே.ஜே.ஜார்ஜூம், 46,820 வாக்குகளை பத்மநாப ரெட்டியும் பெற்றிருந்தனர்.
கடந்த சட்டசபை தேர்தலில் 3-வது முறையாக சர்வக்ஞநகர் தொகுதியில் களமிறங்கிய கே.ஜே.ஜார்ஜ், 53,304 வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜனதா வேட்பாளர் பத்மநாப ரெட்டியை வீழ்த்தி வெற்றி வாகை சூடினார். அதாவது கே.ஜே.ஜார்ஜ், 1,09,955 வாக்குகளும், பத்மநாப ரெட்டி 56,651 வாக்குகளும் பெற்றிருந்தனர்.
விரைவில் நடைபெற உள்ள தேர்தலில் கே.ஜே.ஜார்ஜ் இதே தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். பா.ஜனதா சார்பில் கடந்தமுறை போட்டியிட்டு தோல்வி அடைந்த பத்மநாப ரெட்டியே மீண்டும் இங்கு களம் இறங்குகிறார். ஜனதாதளம்(எஸ்) சார்பில் முகமது முஸ்தபா வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.
கடந்த தேர்தலில் வெற்றி பெற்று மந்திரியாக உள்ள கே.ஜே.ஜார்ஜ் இங்கு பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்து உள்ளார். இது அவருக்கு பலமாக பார்க்கப்படுகிறது. சர்வக்ஞநகர் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருக்கும் கே.ஜே.ஜார்ஜ் மீண்டும் வெற்றியை ருசிப்பாரா? என்பது மே 15-ந்தேதி தெரிந்துவிடும்.
கடந்த தேர்தல்களில் வெற்றி-தோல்வி நிலவரம்
2008-ம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட இந்த தொகுதியில் இதுவரை 3 சட்டசபை தேர்தல்கள் நடந்து உள்ளன. அதன் முடிவுகள் பின்வருமாறு:-
ஆண்டு வெற்றி தோல்வி
2008 கே.ஜே.ஜார்ஜ்(காங்.)-45,488 சங்கர்(பா.ஜனதா)-22,880
2013 கே.ஜே.ஜார்ஜ்(காங்.)-69,673 பத்மநாப ரெட்டி(பா.ஜனதா)-46,820
2018 கே.ஜே.ஜார்ஜ்(காங்.)-1,09,955 பத்மநாப ரெட்டி(பா.ஜனதா)-56,651