பெங்களூருவில் நடைபெறும் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் ஜனதாதளம் (எஸ்) பங்கேற்குமா?; குமாரசாமி பதில்

பெங்களூருவில் நடைபெறும் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் ஜனதா தளம் (எஸ்) கட்சி பங்கேற்குமா என்பதற்கு குமாரசாமி பதிலளித்துள்ளார்.

Update: 2023-07-02 18:45 GMT

பெங்களூரு

முன்னாள் முதல்-மந்திரியும், ஜனதாதளம் (எஸ்) கட்சியின் மூத்த தலைவருமான குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்த பிறகு மாநிலத்தில் ஒய்.எஸ்.டி. வரி அமலாகியுள்ளது. அதிகாரிகள் பணி இடமாற்றத்திற்கு நள்ளிரவில் கூட்டம் நடத்துகிறார்கள். அவ்வாறு கூட்டம் நடத்துகிறவர்களை கேட்டால் ஒய்.எஸ்.டி. வரி என்றால் என்ன என்பது தெரியும். நான் காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்தபோது, அக்கட்சி தலைவா்கள் என்ன செய்தனர் என்பது எனக்கு தெரியும்.

காங்கிரஸ் மந்திரிகள் என்ன செய்தனர்?. நான் முதல்-மந்திரியாக இருந்த போதிலும் ஒரு அதிகாரியை கூட என்னால் பணி இடமாற்றம் செய்ய முடியவில்லை. எல்லா விஷயங்களும் யாருடைய கண்காணிப்பில் நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். இடமாற்றத்திற்கு பணம் கொடுக்க வந்த அதிகாரிகளை நான் தொலைவில் வைத்தேன். இது தான் நான் நடத்திய ஆட்சி நிர்வாகம்.

இப்போது காங்கிரசார் ஒய்.எஸ்.டி. வரியை தொடங்கி கொண்டுள்ளனர். காங்கிரஸ் ஆட்சியில் நிர்வாகம் பாதை மாறிவிட்டது. ஒரு அரசு, பல முதல்-மந்திரிகள் என்ற நிலை உருவாகியுள்ளது. சித்தராமையா மட்டுமே முதல்-மந்திரி அல்ல, ஒவ்வொரு துறை மந்திரியும் முதல்-மந்திரியே. மந்திரிகள் அனைவரும் தாங்கள் முதல்-மந்திரிகள் என்பது போல் பேசுகிறார்கள். இதை அரசு என்று அழைக்க முடியுமா?. இந்த ஆட்சியில் வெளிப்படைத்தன்மை இருக்கிறதா?.

பெங்களூருவில் நடைபெறும் எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்கு எங்கள் கட்சிக்கு அழைப்பு விடுக்கவில்லை. அதனால் நாங்கள் அந்த கூட்டத்தில் கலந்துக்கொள்ள மாட்டோம். எங்களுடையது சிறிய கட்சி. இதை நாங்கள் வளர்ப்போம். அதற்காக கட்சி நிர்வாகிகளின் தொடர் கூட்டங்களை நடத்துகிறோம். இந்த அரசு அமைந்து 50 நாட்கள் ஆகிறது. இந்த அரசின் தவறுகளுக்கு எதிராக எப்படி போராட்டம் நடத்துவது என்பது குறித்து ஆலோசிக்க உள்ளோம்.

எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் நாங்கள் துவண்டுவிட மாட்டோம். சட்டசபைக்கு உள்ளேயும், வெளியேயும் நாங்கள் போராட்டம் நடத்துவோம். காங்கிரசின் உத்தரவாத திட்டங்கள் குறித்து சட்டசபையில் நான் பேச மாட்டேன். நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகிறது. இன்னும் எத்தனை ஆண்டுகள் மக்களை கை நீட்டும் வகையில் செய்வீர்கள்?.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

பெங்களூருவில் வருகிற 13, 14-ந்தேதிகளில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்