5 ஆண்டு சம்பளம், படிகளை விட்டு தருவேன்: தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய குஜராத் எம்.எல்.ஏ.

குஜராத்தில் தேர்தல் பிரசாரத்தில் அளித்த வாக்குறுதியின்படி 5 ஆண்டு சம்பளம், படிகளை பா.ஜ.க. எம்.எல்.ஏ. விட்டு தந்துள்ளார்.

Update: 2022-12-21 14:14 GMT



காந்திநகர்,


குஜராத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஆளும் பா.ஜ.க. பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைத்து உள்ளது. தேர்தலின்போது துவாரகா மாவட்ட பகுதியை சேர்ந்த பபுபா மேனக் என்பவர் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டார்.

அவர் தேர்தல் பிரசாரத்தின்போது வாக்காளர்களிடம், எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டால் தனது அடுத்த 5 ஆண்டு கால சம்பளம் மற்றும் படிகளை விட்டு தருவேன் என வாக்குறுதி அளித்துள்ளார்.

இதன்பின், தேர்தலில் அவர் காங்கிரஸ் வேட்பாளர் மொலுபாய் கந்தோரியா என்பவரை விட 5,327 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மொத்தம் 74,018 வாக்குகளை மேனக் பெற்றார்.

அவர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார். இதன்படி, தனது 5 ஆண்டு கால சம்பளம் மற்றும் படிகளை விட்டு தருவதற்கான கடிதம் ஒன்றை சபாநாயகருக்கு மேனக் அனுப்பியுள்ளார். இது சட்டசபை கூட்டத்தொடரில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

எம்.எல்.ஏ.வின் முடிவு குஜராத் சட்டசபை வரலாற்றில் முதன்முறையாக நடந்துள்ளது என கூறப்படுகிறது. மேனக், 1990, 1995 மற்றும் 1998 ஆகிய ஆண்டுகளில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

2002-ம் ஆண்டில் காங்கிரசில் இணைந்து வெற்றி பெற்றார். 2007-ம் ஆண்டில் பா.ஜ.க.வில் இருந்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து, 2012, 2017 மற்றும் 2022 சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெற்றுள்ளார்.

தேர்தல் வாக்குறுதியின்படி, தனது சம்பளம் மற்றும் படிகளை விட்டு தந்துள்ள முடிவு, தேச பணியில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று என்று அவரது ஆதரவாளர்கள் புகழ்ந்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்