தொண்டர்கள் விரும்பினால் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட தயார் ; அசோக் கெலாட்

கட்சி தொண்டர்கள் விரும்பினால் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய தயார் என்று அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

Update: 2022-09-21 11:31 GMT

புதுடெல்லி,

காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல்காந்தி கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதி ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து காங்கிரஸ் இடைக்கால தலைவராக சோனியா காந்தி செயல்பட்டு வருகிறார்.

இதனிடையே, காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் வரும் 24 முதல் 30-ம் தேதி வரை தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம்.

தலைவர் பதவிக்கான தேர்தல் வாக்குப்பதிவு அக்டோபர் 17-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் பதிவான வாக்குகள் அக்டோபர் 19-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

இதனிடையே, தலைவர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் யார்? என்பதில் காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் தொடர்ந்து குழப்பமான சூழ்நிலை நிலவி வருகிறது.

காங்கிரஸ் கட்சியின் தலைவராக மீண்டும் ராகுல்காந்தியே பொறுப்பேற்க வேண்டுமென தமிழ்நாடு பல்வேறு மாநில காங்கிரஸ் தலைமை தீர்மானம் நிறைவேற்றி வருகிறது.

இதனால், காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் ராகுல்காந்தி போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை, காங்கிர மூத்த தலைவர்களும் தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக, ஜி23 என்று அழைக்கப்படும் காங்கிரஸ் அதிருப்தி தலைவர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள சசி தரூர் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட மற்றொரு மூத்த தலைவர் திட்டமிட்டுள்ளார். ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளார்.

கன்னியாகுமரியில் ராகுல்காந்தி தொடங்கிய இந்திய ஒற்றுமை பாத யாத்திரை கேரளாவை அடைந்துள்ளது. கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் ராகுல்காந்தி பாத யாத்திரையாக பணித்து வருகிறார்.

இதனிடையே, காங்கிரஸ் கட்சியின் தலைவராக மீண்டும் பொறுப்பேற்க வேண்டும் என ராகுல்காந்தி கடைசியாக ஒருமுறை வலியுறுத்த அசோக் கெலாட் இன்று டெல்லியில் இருந்து கேரளாவுக்கு விமானம் மூலம் புறப்படுகிறார். முன்னதாக காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் அசோக் கெலாட் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது காங்கிரஸ் தலைவர் தேர்தல் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்நிலையில், அசோக் கெலாட் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுவீர்களா? உள்பட பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த கெலாட், காங்கிரஸ் கட்சியும், கட்சி மேலிடமும் எனக்கு அனைத்தையும் கொடுத்துள்ளது. நான் 40 முதல் 50 ஆண்டுகளாக பதவியில் உள்ளேன். என்னை பொறுத்தவரை எனக்கு பதவி முக்கியமல்ல. எனக்கு கொடுக்கப்படும் பொறுப்புகளை நான் செய்து முடிப்பேன்.

காங்கிரஸ் கட்சியின் ஆண், பெண் தொண்டர்கள் என் மீது அளவற்ற அன்பையும், நம்பிக்கையையும் கொண்டுள்ளனர்.

ஆகையால், காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் தொண்டர்கள் கேட்டுக்கொண்டால் நான் அதை நிராகரிக்க முடியாது. கட்சி தொண்டர்கள் விரும்பினால் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய தயார்.

எனது நண்பர்களுடன் இது குறித்து பேசவேண்டும். எனக்கு ராஜஸ்தான் முதல்-மந்திரி என்ற பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. முதல்-மந்திரியாக எனது பொறுப்பை செய்து வருகிறேன் தொடர்ந்து செய்வேன்.

காங்கிரஸ் எனக்கு அனைத்தையும் கொடுத்துள்ளது. பதவி எனக்கு முக்கியமல்ல. முடிவெடுப்பது என்கையில் இருந்தால் நான் எந்த பதவியையும் ஏற்க விரும்பவில்லை. நான் ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை பாத யாத்திரையில் சேர விரும்புகிறேன். நாட்டு நிலைமையை பார்த்தால் அரசியலமைப்பு அழிக்கப்பட்டுள்ளது. ஜனநாயகம் ஆபத்தில் உள்லது. பாஜக நாட்டை அழிக்கிறது' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்