வரும் மக்களவை தேர்தலில் டெல்லியில் 7 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி போட்டி

வரும் மக்களவை தேர்தலில் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி போட்டியிடும் என அந்தக் கட்சியின் மூத்த தலைவர் தெரிவித்துள்ளார்.

Update: 2023-06-28 23:21 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

அடுத்த ஆண்டு நடக்க உள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை அணி திரட்டி பொது வேட்பாளர்களை நிறுத்த முயற்சி நடந்து வருகிறது.

இது தொடர்பாக கடந்த 23-ந் தேதி பாட்னாவில் பீகார் மாநில முதல்-மந்திரியும், ஐக்கிய ஜனதாதளம் தலைவருமான நிதிஷ்குமார் கூட்டிய எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் கெஜ்ரிவால் கலந்து கொண்டார்.

இருப்பினும், டெல்லி அரசின் அதிகாரத்தை பறிக்கிற வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் ஆதரவை கெஜ்ரிவால் பெற்றுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி இதில் மவுனம் காத்து வருவதில் ஆம் ஆத்மி அதிருப்தி அடைந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றம் கூடுகிறபோது முடிவு எடுக்கலாம் என்று காங்கிரஸ் தலைவர் கார்கே கூறுகிறார்.

7 தொகுதிகளிலும் போட்டி

இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் சந்தீப் பதக் டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

பா.ஜ.க. வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றுபட வேண்டும். ஆனால் இது காங்கிரஸ் கட்சியின் அணுகுமுறையைப் பொறுத்தே இருக்கிறது.

டெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதிகளிலும் போட்டியிடுவதற்கு ஆம் ஆத்மி கட்சி தயாராகி வருகிறது. டெல்லியில் ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள கருப்பு அவசர சட்டம் பற்றி மக்களிடம் எடுத்துக்கூறுவதில் கவனம் செலுத்துவோம்.

அவசர சட்டம்

இந்த அவசர சட்டம், கெஜ்ரிவாலுக்கு எதிரானது மட்டுமல்ல, மக்களுக்கும் எதிரானது.

எதிர்க்கட்சிகளை ஒழித்துக்கட்ட பா.ஜ.க. முயற்சிப்பது, கடந்த 9 ஆண்டுகளில் மோடி அரசு செய்தது என்ன என்பது பற்றியும் மக்களிடம் சொல்வோம். மோடி அரசு செய்த 4 விஷயங்களை யாராவது சொன்னால் நாங்கள் அவர்களை பாராட்ட தயாராக இருக்கிறோம். மோடி அரசு, சி.பி.ஐ., அமலாக்கத்துறை இயக்குனரகம் போன்ற மத்திய விசாரணை அமைப்புகளை சீரழித்து வருகிறது.

காங்கிரசை பொறுத்தது

எதிர்க்கட்சிகள் ஒன்றபட்டு பா.ஜ.க. வை தூக்கி எறிய வேண்டும். இது காங்கிரசைப் பொறுத்ததுதான்.

காங்கிரஸ் திறந்த மனதுடன், எவ்வொருவரையும் உடன் கொண்டுசென்றால், எல்லாமே சாத்தியம்தான். ஆனால் காங்கிரஸ் அகந்தையுடன் செயல்பட்டால் எல்லாமே கடினமாகி விடும்.

சிம்லாவில் அடுத்த மாதம் நடக்க உள்ள எதிர்க்கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வது பற்றி முடிவு எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்