கடந்த 2008-ம் ஆண்டு நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்பின்போது மகாதேவபுரா தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டது. தனி தொகுதியான இங்கு பா.ஜனதா கட்சியை சேர்ந்த அரவிந்த் லிம்பாவளி கடந்த 3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் வருகையால் இந்த தொகுதி மாவட்டத்தில் அதிக வரி வருவாய் ஈட்டித்தரும் தொகுதிகளில் ஒன்றாய் திகழ்கிறது. மகாதேவபுரா தொகுதி பா.ஜனதாவின் கோட்டையாக திகழ்ந்து வருகிறது. இந்த தொகுதியில் தற்போதைய எம்.எல்.ஏ. அரவிந்த் லிம்பாவளி டிக்கெட் கேட்டு வந்தார். ஆனால் அவருக்கு கட்சி டிக்கெட் வழங்க மறுத்தது. அரவிந்த் லிம்பாவளியின் மனைவி மஞ்சுளா அரவிந்த் லிம்பாவளிக்கு போட்டியிட பா.ஜனதா மேலிடம் வாய்ப்பு வழங்கி உள்ளது.
காங்கிரஸ் சார்பில் டி.நாகேஷ் என்பவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் இங்கு வேட்பாளர் நிறுத்தப்படவில்லை. அந்த கட்சி, மகாதேவபுரா தொகுதியில் இந்திய குடியரசு கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
இந்த தொகுதியில் மொத்தம் 5 லட்சத்து 90 ஆயிரத்து 891 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 3 லட்சத்து 18 ஆயிரத்து 238 ஆண்களும், 2 லட்சத்து 72 ஆயிரத்து 532 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 121 பேரும் அடங்குவர். இந்த ெதாகுதியில் வாக்காளர்களின் வசதிக்காக 479 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது.
மகாதேவபுரா தொகுதியில் பெங்களூரு மாநகராட்சிக்கு உட்பட்ட வர்த்தூர், பெல்லந்தூர், தொட்டேனகுந்தி, மாரத்தஹள்ளி, காடுகோடி, கருடாச்சார் பாளையா, ஹுடி, ஹகதூர் ஆகிய 8 வார்டுகள் உள்ளன. இதில் அதிகமான தொகுதிகளில் காங்கிரஸ் பலமாக திகழ்ந்தாலும், மகாதேவபுரா தொகுதியில் பா.ஜனதா தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மகாதேவபுரா தொகுதியை பா.ஜனதா கட்சி மீண்டும் தக்க வைக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
கடந்த தேர்தல்களில் வெற்றி-தோல்வி நிலவரம்
மகாதேவபுரா தொகுதியில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை நடந்த 3 சட்டசபை தேர்தல்கள் நடந்து உள்ளன. அதன் விவரம் பின்வருமாறு:-
ஆண்டு வெற்றி தோல்வி
2008 அரவிந்த் லிம்பாவளி(பா.ஜனதா)-76,376 சிவண்ணா(காங்.)-63,108
2013 அரவிந்த் லிம்பாவளி(பா.ஜனதா)-1,10,244 சீனிவாஸ்(காங்.)-1,04,095
2013 அரவிந்த் லிம்பாவளி(பா.ஜனதா)-1,41,682 சீனிவாஸ்(காங்.)-1,23,898