வனவிலங்குகள் உயிரிழந்த சம்பவம்: தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு ரூ.75 லட்சம் அபராதம் உறுதி - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
நீலகிரியில் மின் வேலியில் சிக்கி யானை உள்ளிட்ட வனவிலங்குகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு 75 லட்சம் ரூபாய் அபராதத்தை உறுதி செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.;
புதுடெல்லி,
கடந்த 2020-ம் ஆண்டு நீலகிரி மாவட்டம் சேரம்பாடி என்ற இடத்தில் மின்சார வேலியில் சிக்கி யானை, நான்கு காட்டுப் பன்றிகள், ஒரு கீரிப்பிள்ளை, 3 நாகப்பாம்புகள், ஒரு காகம் உள்ளிட்டவை உயிரிழந்தன. இந்நிலையில், இது தொடர்பாக செய்தித்தாள்களில் வெளியான செய்தியின் அடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. அதிக அளவு மின்சார திறன் கொண்ட மின் இணைப்புகளை வழங்கியதற்கு தமிழ்நாடு மின்வாரியமே பொறுப்பு எனக் கூறி 75 லட்ச ரூபாய் அபராதம் விதித்தது.
மேலும், அந்தத் தொகையினை வனத்துறைக்கு வழங்க வேண்டும் என்று கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் தீர்ப்பு வழங்கியது. இந்த தொகையை மின்வாரியம் செலுத்தவில்லை என்றால் வனத்துறை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரை அணுகி பெற்றுக் கொள்ளலாம். பெறப்படும் தொகையை விலங்குகள் மனிதர்கள் இடையிலான மோதலை தடுப்பதற்கான பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும் எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் இந்த மனு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், "தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பில் தாங்கள் தலையிட விரும்பவில்லை எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து, 75 லட்ச ரூபாய் அபராதத்தை செலுத்த தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு உத்தரவிட்டனர்.