"நீதி வழங்குவதில் தாமதம் ஏன்?" - ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து கேரள அரசுக்கு ஜே.பி.நட்டா கேள்வி

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி வழங்கவிடாமல் உங்களை தடுப்பது எது? என்று ஜே.பி. நட்டா கேள்வி எழுப்பி உள்ளார்.

Update: 2024-09-01 13:34 GMT

கோப்புப்படம்

பாலக்காடு (கேரளா),

மலையாள திரையுலகில் நடிகைகள் பாலியல் தொல்லைக்கு ஆளாவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இதுகுறித்து விசாரிப்பதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த கமிட்டியின் அறிக்கையை கேரள அரசு கடந்த வாரம் வெளியிட்டது. அதில், நடிகைகளுக்கும், பெண் கலைஞர்களுக்கும் பாலியல் தொல்லை இருப்பதாகவும், இதில் மாபியா கும்பல் தலையீடு இருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுக்கு எதிராக பாலியல் புகார்கள் அடுத்தடுத்து அம்பலத்திற்கு வந்தவண்ணம் உள்ளன. நடிகர் சங்கத்தில் உள்ள சிலர் மீதும் புகார் எழுந்ததால் நடிகர் சங்க தலைவர் மோகன்லால் உள்பட நிர்வாகிகள் பதவி விலகினர். தொடர்ந்து புகார் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.

இந்நிலையில் மலையாளத் திரையுலகில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானவர்களுக்கான ஹேமா கமிட்டியின் அறிக்கை வெளியான விவகாரத்தில் நீதி வழங்குவதில் தாமதம் ஏன் என்று மத்திய மந்திரியும், பா.ஜ.க. தேசியத் தலைவருமான ஜே.பி. நட்டா இன்று கேள்வி எழுப்பினார்.

கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ஜே.பி. நட்டா, "ஹேமா கமிட்டி அறிக்கைக்கு நீதி வழங்குவதில் தாமதம் ஏன்? அவர்களை (கேரள அரசு) எது தடுக்கிறது? எது உங்களைத் துன்புறுத்துகிறது? நீங்கள் அதில் ஒரு பகுதியாக இருப்பதால்... உங்கள் கட்சியின் நபர்கள் சம்பந்தப்பட்டிருப்பதால் அதை மறைக்க விரும்புகிறீர்கள். ..ஹேமா கமிட்டியின் அறிக்கையில் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்று கூறுவதை கேட்டு நான் மிகவும் வருந்துகிறேன். கடந்த மாதம், மலையாள சினிமா துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் துன்புறுத்தல்கள் குறித்த நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கையின் திருத்தப்பட்ட பதிப்பு பகிரங்கப்படுத்தப்பட்டது. பெண் தொழில் வல்லுநர்களை துன்புறுத்துதல், சுரண்டல் மற்றும் தவறாக நடத்துதல் போன்ற அதிர்ச்சியூட்டும் தகவல்கள் இதில் உள்ளன" என்று அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்