எதிர்க்கட்சி தலைவர்களின் வீடுகளில் மட்டுமே வருமான வரி சோதனை நடத்துவது ஏன்? கர்நாடக மந்திரி பிரியங்க் கார்கே கேள்வி
எதிர்க்கட்சி தலைவர்களின் வீடுகளில் மட்டுமே வருமான வரி சோதனை நடத்துவது ஏன்? என்று கிராம வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் துறை மந்திரி பிரியங்க் கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.;
கிராம வளர்ச்சி-பஞ்சாயத்து ராஜ் மந்திரி பிரியங்க் கார்கே பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
வருமான வரி சோதனை
வருமான வரித்துறை, சி.பி.ஐ., அமலாக்கத்துறை போன்ற அனைத்தும் பா.ஜனதாவின் கையில் உள்ளது. அதனால் எதிர்க்கட்சி தலைவர்களின் வீடுகளில் மட்டும் வருமான வரி சோதனை நடத்துவது ஏன்?. பா.ஜனதா-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி அமைந்துள்ளது. அதனால் குமாரசாமியின் பேச்சை பா.ஜனதா கேட்கிறது. யாராவது தவறு செய்திருந்தால் அவர்கள் தண்டனையை அனுபவிக்கட்டும். ஆனால் வெறும் விளம்பரத்திற்காக சோதனைகள் நடத்துவது சரியல்ல.
சட்டசபை தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிட டிக்கெட் பெற்று கொடுப்பதாக கூறி சைத்ரா குந்தாப்புரா கோடிக்கணக்கான ரூபாய் பணம் வசூலித்துள்ளார். இந்த பணம் பா.ஜனதா தலைவர்கள் சிலருக்கு வழங்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டவர்களே சொல்கிறார்கள். இதில் வருமான வரித்துறை, அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தாதது ஏன்?.
முதுகெலும்பு இல்லை
எதிா்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மட்டுமே இந்த விசாரணை அமைப்புகள் சோதனை நடத்துகின்றன. மத்திய தணிக்கை துறை, மத்திய அரசில் ரூ.40 ஆயிரம் கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக அறிக்கைகள் வழங்கியுள்ளன. இதுகுறித்து விசாரணை நடைபெறவில்லை. பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் வருமான வரி சோதனைகள் நடைபெறாதது ஏன்?.
சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்து ஜனதா தளம் (எஸ்) தனது அங்கீகாரத்தை இழந்துவிட்டது. அதனால் இவ்வாறான வருமான வரி சோதனைகளை நடத்துகிறார்கள். கர்நாடக பா.ஜனதா தலைவர்களுக்கு முதுகெலும்பு இல்லை. தங்களை கட்சி மேலிடம் மதிப்பது இல்லை என்று அக்கட்சி தலைவர்கள் சதானந்தகவுடா, ரேணுகாச்சார்யா ஆகியோர் கூறியுள்ளனர்.
முகவரியே இல்லை
5 மாநில சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் பா.ஜனதா ஆதங்கத்தில் உள்ளது. சத்தீஸ்கரில் பா.ஜனதா வெற்றி பெறாது என்று கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. தெலுங்கானாவில் பா.ஜனதாவுக்கு முகவரியே இல்லை. மத்திய பிரதேசத்தில் முதல்-மந்திரியாக உள்ளவருக்கு பா.ஜனதா 3-வது பட்டியலில் தான் போட்டியிட இடம் கொடுத்துள்ளது. அங்கும் பா.ஜனதாவுக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு பிரியங்க் கார்கே கூறினார்.