பாஜகவில் சேர விரும்புபவர்களுக்கு எனது காரை கடனாக கொடுக்க தயார் - கமல்நாத் கிண்டல்
காங்கிரஸிலிருந்து வெளியேறி பாஜகவில் சேர விரும்புபவர்கள் தாராளமாக செல்லலாம், அவர்களுக்கு எனது காரை கடனாக கொடுத்து உதவவும் தயாராக இருக்கிறேன் என ம.பி., காங்., தலைவர் கமல்நாத் கூறியுள்ளார்.;
போபால்,
மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் கமல்நாத் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
காங்கிரஸ் தலைவர்கள் பலர் கட்சியில் இருந்து வெளியேறுவது குறித்து கேட்டபோது பதிலளித்த கமல்நாத்,
காங்கிரஸ் கட்சி அழிந்துவிட்டதாக நினைக்கிறீர்கள், காங்கிரசில் இருந்து வெளியேறி பாஜகவில் இணைய விரும்புகிறவர்கள் தாராளமாக செல்லலாம். நாங்கள் அவர்களைத் தடுக்க மாட்டோம்.
அப்படி செல்பவர்களுக்கு பாஜகவில் நல்ல எதிர்காலம் இருக்கும் என்றால் அவர்கள் பாஜகவில் சென்று இணைய நானே எனது காரை கடனாக தருகிறேன். யாரையும் சமாதானப்படுத்தி கட்சியில் தொடர வைப்பதில் நம்பிக்கையில்லை.
காங்கிரசில் அனைவரும் அர்ப்பணிப்புடன் வேலை செய்கின்றனர். யார் மீதும் கட்சி எந்த அழுத்தங்களையும் தருவதில்லை என்றார்.
கடந்த சனிக்கிழமையன்று நமீபியாவிலிருந்து குனோ தேசிய பூங்காவிற்கு கொண்டு வரப்பட்ட சிவிங்கிப் புலிகள் குறித்து கருத்து தெரிவித்த கமல் நாத், " குஜராத்தின் கிர் காடுகளில் இருந்து குனோ தேசிய பூங்காவிற்கு சிங்கங்களை மாற்றுவதற்கு மறுப்பு தெரிவித்த விவகாரத்திலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காகவே சிவிங்கிப்புலிகள் தற்போது கொண்டுவரப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.