"மிஸ்டர் பிரதமர் நீங்கள் திமிர் பிடித்தவர்": திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கோபம்
மணிப்பூர் விவகாரம் காரணமாக மக்களவை-மாநிலங்களவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.;
புதுடெல்லி,
மணிப்பூர் விவகாரம், பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. விவாதம் நடத்த வேண்டும் என்றும், பிரதமர் பாராளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதனால் அவையில் தொடர்ந்து அமளி நிலவுகிறது.
இந்த அமளிக்கு மத்தியிலும் சில முக்கிய மதோக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவ்வகையில், மக்களவையில் இன்று கடும் அமளிக்கிடையே ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. நாளை காலை 11 மணிக்கு இனி மக்களவை கூடும்.
ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையில் கடந்த 27ம்தேதி நிறைவேற்றப்பட்ட நிலையில் இன்று மக்களவையில் நிறைவேறியிருக்கிறது.
மாநிலங்களவையில் இன்று மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விவாதிக்க அவைத்தலைவர் ஜெகதீப் தன்கர் அழைப்பு விடுத்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. விதி எண் 267ன் கீழ் விவாதிக்க வலியுறுத்தினர்.
இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு மத்தியில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய பாஜக எம்பியும், மாநிலங்களவை கட்சி தலைவருமான பியூஷ் கோயல், மணிப்பூர் விவகாரம் குறித்து பிற்பகல் 2 மணிக்கு விவாதம் நடத்த வலியுறுத்தினார்.
ஆனால் விதி எண் 267ன் கீழ் விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. பிற்பகல் 2 மணிக்கு விவாதத்தை தொடங்க அவைத்தலைவர் ஜெகதீப் தன்கர் தயாரானார்.
விதி எண் 267-ன் கீழ் கொடுக்கப்பட்ட நோட்டீஸ்களை ஏற்க மறுத்தார். விதி எண் 176-ன் கீழ் விவாதிப்பதற்கான மத்திய அரசின் நோட்டீசை ஏற்றார். அதன்படி குறுகிய கால விவாதத்திற்கு அழைப்பு விடுத்தார்.
இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. விதி எண் 267ன் கீழ் விவாதிக்க வலியுறுத்தி முழக்கமிட்டன. இதனால் அமைதியற்ற நிலை உருவானது. எனவே, அவை 2.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
அதன் பின்னரும் அமளி நீடித்ததால் அவை நடவடிக்கைகள் 3.30 வரை ஒத்திவைக்கப்பட்டன. பின்னர் அவை கூடியதும் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி டெரிக் ஓ பிரையன் பிரதமர் மோடி மீது கடும் குற்றம் சாட்டினார். இது குறித்து பாராளுமன்றத்திற்கு வெளியே எம்.பி டெரிக் ஓ பிரையன் கூறியதாவது:-
மிஸ்டர் பிரதமர், நீங்கள் யார் என்று நினைத்து கொண்டீர்கள்...? மிஸ்டர் பிரதமர் நீங்கள் மிகவும் திமிர்பிடித்தவர், உங்களுக்கு கல் நெஞ்சம் உள்ளது. மணிப்பூர் விவகாரம் குறித்து விரிவான விவாதம் நடத்த வேண்டும். எங்கள் பிரதிநிதிகள் மணிப்பூருக்கு சென்று வந்துள்ளனர். இது மிகவும் தீவிரமான பிரச்சனை, பிரதமர் ஏன் வரக்கூடாது? மணிப்பூர் குறித்து விவாதிக்க நாங்கள் அனைவரும் தயாராக இருக்கிறோம் என கூறினார்.