உலக அழகி மகுடம் யாருக்கு? மும்பையில் நாளை மறுநாள் இறுதிப்போட்டி

இந்தியா சார்பில் இந்த ஆண்டு பங்கேற்கும் சினி ஷெட்டி 2022-ம் ஆண்டு இந்திய அழகி பட்டத்தை வென்றவர் ஆவார்.;

Update: 2024-03-07 13:23 GMT

மும்பை,

71-வது உலக அழகி போட்டி கடந்த மாதம் 18-ந்தேதி டெல்லியில் தொடங்கியது. இதன் இறுதிப்போட்டி நாளை மறுநாள் (9-ந்தேதி) மும்பையில் நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இறுதிப்போட்டியை இந்தி திரைப்பட இயக்குனர் கரண் ஜோகர், முன்னாள் உலக அழகி மேகன் யங் ஆகியோர் இணைந்து நடத்த உள்ளனர்.

போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 117 பேர் கலந்து கொண்டு உள்ளனர். இதில் இறுதிப்போட்டிக்கு இந்தியாவை சேர்ந்த சினி ஷெட்டி உள்பட 14 பேர் தகுதி பெற்று உள்ளனர்.

இந்தியாவை தவிர்த்து மங்கோலியா, அயர்லாந்து, எஸ்தோனியா, வடக்கு அயர்லாந்து, இந்தோனேசியா, ஹங்கேரி, நெதர்லாந்து, போர்ச்சுகல், வேல்ஸ், துனிசியா, போட்ஸ்வானா, கவுதமாலா, ஜிப்ரால்டர் நாடுகளை சேர்ந்த அழகிகளும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று உள்ளனர். இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் அழகிக்கு 2021-ம் ஆண்டு பட்டம் வென்ற போலந்து நாட்டை சேர்ந்த கரோலினா உலக அழகிக்குரிய மகுடத்தை சூட்ட உள்ளார்.

உலக அழகி போட்டி முதல்முறையாக இங்கிலாந்தில் 1951-ம் ஆண்டு நடத்தப்பட்டது. இந்தியாவில் 1996-ம் ஆண்டு உலக அழகி போட்டி நடந்தது. 28 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் உலக அழகி போட்டி நடக்கிறது. உலக அழகி பட்டத்தை இதுவரை 6 முறை இந்தியா வென்று உள்ளது.

இந்தியாவை சேர்ந்த ரீட்டா பரியா (1966), ஐஸ்வர்யா ராய் (1994), டயானா ஹெய்டன் (1997), யுக்தா முகி (1999), பிரியங்கா சோப்ரா (2000) மற்றும் மனுஷி சில்லார் (2017) ஆகியோர் உலக அழகி பட்டத்தை வென்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு இந்தியா சார்பில் பங்கேற்கும் சினி ஷெட்டி 2022-ம் ஆண்டு இந்திய அழகி பட்டத்தை வென்றவர் ஆவார். கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட சினி ஷெட்டி மும்பையில் பிறந்து வளர்ந்தவர் ஆவார்.

Tags:    

மேலும் செய்திகள்