'தாய்நாட்டை மதிக்க கற்றுக் கொள்ளுங்கள்' ராகுல்காந்திக்கு குஷ்பு கண்டனம்
எதிர்க்கட்சியினரும், ராகுல்காந்தியும் இந்தியாவை அன்னிய மண்ணில் வசைப்பாடுவதில் மும்முரம் காட்டுகிறார்கள் என நடிகையும், பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினருமான குஷ்பு கூறியுள்ளார்.
சென்னை,
ராகுல்காந்தி அமெரிக்கா நாட்டுக்கு சென்றுள்ளார். அவர், அமெரிக்க வாழ் இந்தியர்கள் பங்கேற்ற கூட்டத்தில் பேசும்போது, 'பிரபஞ்சம் எப்படி இயங்குகிறது என கடவுளுக்கே பாடம் எடுப்பார் மோடி' என்று கிண்டலடித்தார். ராகுல்காந்தியின் இந்த பேச்சுக்கு, அன்னிய மண்ணில் நாட்டை இழிவுப்படுத்துவதா? என்று பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் ராகுல்காந்தியின் பேச்சுக்கு நடிகையும், பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினருமான குஷ்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட 'டுவிட்டர்' பதிவில் கூறியிருப்பதாவது:-
எதிர்க்கட்சியினரும், ராகுல்காந்தியும் இந்தியாவை அன்னிய மண்ணில் வசைப்பாடுவதில் மும்முரம் காட்டுகிறார்கள். இது அவர்கள் தாய்நாட்டின் மதிப்பை படித்து, பார்த்து, மூளையில் பதிந்து கொள்ள வேண்டும் என்பதை காட்டுகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் திறமையான தலைமையின் கீழ் இந்தியா வளர்ந்து வருகிறது. உலகின் மிக வேகமாக வளரும் நாடாக சிறகு விரித்து உயரப் பறந்து கொண்டிருக்கிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.