பாஜக ஆட்சியில் சிறுபான்மை பிரிவை சேர்ந்தவர்களே ஜனாதிபதியாக இருந்தனர் - மத்திய மந்திரி ஜிதேந்திர சிங்

'இந்தியாவில் சிறுபான்மையினர் பிரதமராக முடியுமா' என்ற கேள்வியை எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் எழுப்பியுள்ளனர்.;

Update: 2022-10-25 13:20 GMT

புதுடெல்லி,

இந்தியாவில் பெரும்பான்மைவாதம் மற்றும் பிரிவினைவாதம் நிலவி வருவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஆளும் பாஜக ஆட்சியை தாக்கி பேசுவதற்கு, இங்கிலாந்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பிரதமராக தேர்வான விஷயம் உதவியாக உள்ளது.

இங்கிலாந்தின் பிரதமராக ரிஷி சுனக்கிற்கு வாழ்த்து தெரிவிக்கும் அதே வேளையில், பாஜகவை தாக்கியும் காங்கிரஸ் உட்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

'இந்தியாவில் எந்த சிறுபான்மையினரும் பிரதமராக முடியுமா' என்ற கேள்வியை எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் எழுப்பியுள்ளனர். பாஜக மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு இடையே வார்த்தைப் போர் தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும் பிடிபி கட்சி தலைவருமான மெகபூபா முப்தி சமூக வலைதளங்களில் கூறுகையில், "இங்கிலாந்தின் முதல் இந்திய வம்சாவளி பிரதமராக ரிஷி சுனக் பதவியேற்பது பெருமையான தருணம். முழு இந்தியாவும் உண்மையிலேயே கொண்டாட வேண்டிய விஷயம்.

யுனைடெட் கிங்டம்(இங்கிலாந்து) சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவரை பிரதமராக ஏற்றுக்கொண்டது நினைவுகூரத்தக்கது. மறுபுறம், என்ஆர்சி மற்றும் சிஏஏ போன்ற பிளவுபடுத்தும் மற்றும் பாரபட்சமான சட்டங்களுக்கு நாம் கட்டுப்பட்டுள்ளோம்" என்று பதிவிட்டார்.

மெகபூபா முப்தியின் இந்த டுவீட்டிற்கு பதிலளித்து மத்திய மந்திரி ஜித்தேந்திர சிங் கூறியதாவது, "இந்திய ஜனநாயக வரலாற்றை அவர்கள் அறியாதவர்கள் தான் இப்படியெல்லாம் பேசுவார்கள். பாஜக ஆட்சி அமைத்த போதெல்லாம், சிறுபான்மை பிரிவைச் சேர்ந்தவர்களே ஜனாதிபதியாக இருந்தனர். அப்துல் கலாம், ராம்நாத் கோவிந்த், திரவுபதி முர்மு ஆகியோர் சிறுபான்மை பிரிவைச் சேர்ந்தவர்கள்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்