உணவு தேடி வந்தபோது மின்வேலியில் சிக்கி காட்டு யானை செத்தது
உணவு தேடி வந்தபோது மின்வேலியில் சிக்கி காட்டு யானை செத்தது. இதுதொடர்பாக விவசாயியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கொள்ளேகால்-
உணவு தேடி வந்தபோது மின்வேலியில் சிக்கி காட்டு யானை செத்தது. இதுதொடர்பாக விவசாயியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
காட்டு யானை அட்டகாசம்
சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் தாலுகா ஜாகேரி அருகே ஆர்.பி.தாண்டா கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் இருந்து உணவு ேதடி தினமும் ஏராளமான காட்டு யானைகள் வெளியேறி விளைநிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.
இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து உணவு ேதடி காட்டு யானை ஒன்று வெளியேறியது.
மின்சாரம் தாக்கி செத்தது
அப்போது அந்த யானை, ஆர்.பி.தாண்டா பகுதியை சேர்ந்த கோவிந்தநாயக்கா என்பவரின் தோட்டத்துக்குள் நுழைய முயன்றது. அப்போது, கோவிந்தநாயக்கா, தனது ேதாட்டத்தை சுற்றி வேலி அமைத்து மின் இணைப்பு கொடுத்திருந்தார். அந்த சமயத்தில், காட்டு யானை மின்வேலியில் சிக்கி கொண்டது. இதனால் யானை மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அந்த யானை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.
இந்த நிலையில் நேற்று காலை அந்தப்பகுதியை சேர்ந்தவர்கள் தோட்டத்துக்கு சென்றனர். அப்போது, காட்டு யானை செத்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், இதுபற்றி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
விவசாயிக்கு வலைவீச்சு
அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் வனத்துறையினர், கால்நடை டாக்டரை வரவழைத்து அதே இடத்தில் யானைக்கு பிரேத பரிசோதனை செய்தனர். இதையடுத்து அதேப்பகுதியில் அந்த யானை குழி தோண்டி புதைக்கப்பட்டது.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், மின்சாரம் தாக்கி உயிரிழந்தது 20 வயது ஆண் யானை ஆகும். தோட்டத்துக்கு சட்டவிரோதமாக மின்வேலி அமைத்த விவசாயியை தேடி வருகிறோம். அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.