சங்கிலி பறிப்பில் ஈடுபட்டு தப்பியபோது கார் கவிழ்ந்து விபத்து

கடபா அருகே சங்கிலி பறிப்பில் ஈடுபட்டு தப்பி சென்றபோது கார் தலைகீழாக கவிழ்ந்த விபத்தில் படுகாயமடைந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-10-21 19:00 GMT

மங்களூரு;

போர்வை வியாபாரி

தட்சிண கன்னடா மாவட்டம் கடபா தாலுகா தோள்பாடி கிராமத்தை சோ்ந்தவர் கிட்டா. இவருக்கு திருமணம் ஆகி மனைவி உள்ளார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் மர்மநபர்கள் 2 பேர் போர்வை விற்பனை செய்வதற்காக காரில் வந்துள்ளனர். அப்போது அவர்களிடம் கிட்டாவின் மனைவி போர்வையை வாங்குவதற்காக காண்பிக்குமாறு கூறியுள்ளார்.

இதையடுத்து அவர்கள் இருவரும் காரில் இருந்து இறங்கி போர்வைகளை காட்டினர். அப்போது வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து மர்மநபர்கள் கிட்டாவின் மனைவி கழுத்தில் அணிந்திருந்த தங்கச்சங்கிலியை பறிக்க முயன்றனர். இதை சற்றும் எதிர்பாராத அந்த பெண் கத்தி கூச்சலிட்டுள்ளார்.

காரில் தப்பி ஓட்டம்

அவரது சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். இதைகண்ட மர்மநபர்கள் இருவரும் அங்கிருந்து காரில் தப்பி சென்றனர். இதையடுத்து அவர்கள் தோள்பாடியில் இருந்து புஞ்சத்தாறு சாலையில் காரில் தப்பி சென்றனர். இவர்களை அந்த பகுதிமக்கள் வாகனங்களில் சென்று பிடிக்க முயன்றனர். மேலும் அருகே உள்ள கிராம மக்கள் அவர்களை வழிமறித்தனர்.

உடனே அவர்கள் அந்த சாலையில் திருப்பி கணியூர் குறுக்கு சாலையில் சென்றனர். அந்த பகுதியிலும் பொது மக்கள் அவர்களை பிடிக்க திரண்டு இருந்தனர். அப்போது மர்மநபர்கள் காரை வேகமாக ஓட்டியுள்ளனர். இதில் கார் மர்மநபரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரம் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

2 பேர் படுகாயம்-கைது

இதில் அவர்கள் இருவருக்கும் படுகாயம் ஏற்பட்டது. பின்னர் பொது மக்கள் அவர்கள் இருவரையும் பிடித்து வைத்து கடபா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் பேரில் போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து வந்தனர். பின்னர் தங்கச்சங்கிலி பறிக்க முயன்ற இருவரையும் கைது செய்தனர்.

விசாரணையில் அவர்கள் பொளலி அத்தூர் பகுதியை சேர்ந்த ரமிசுதீன் (வயது 25) மற்றும் ரபீக் (30) என்பது ெதரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். மேலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்