முருக மடாதிபதி செய்தது மன்னிக்க முடியாத குற்றம்; எடியூரப்பா சொல்கிறார்

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முருக மடாதிபதி செய்தது மன்னிக்க முடியாத குற்றம் என்று எடியூரப்பா தெரிவித்துள்ளார்.;

Update: 2022-11-08 18:45 GMT

மங்களூரு:

மோடி அலை வீசுகிறது

உடுப்பியில் முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

'இந்துக்கள் புண்படும்படி சதீஷ் ஜார்கிகோளி பேசி உள்ளார். இது மிகவும் கண்டனத்துக்குரியது. இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். இந்து மதம் என்பது மக்களின் உணர்வு பூர்வமானது. அவர்களின் உணர்வை புண்படுத்தக்கூடாது. காங்கிரசின் இந்த கருத்துக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

கர்நாடகத்தில் மோடி அலைவீசுகிறது. நாளுக்கு நாள் பா.ஜனதாவுக்கு ஆதரவு அலை பெருகி வருகிறது. இதனால் கர்நாடகத்தில் காங்கிரஸ் வெற்றி பெறுவதற்கான சாத்திக்கூறுகள் இல்லை. சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று அதை மல்லிகார்ஜுன கார்கேவிடம் சமர்ப்பிப்போம் என்று சித்தராமையா கூறி உள்ளார். அவர் பிரம்மையில் இருப்பது போல தெரிகிறது. கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 140 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும்.

மன்னிக்க முடியாத குற்றம்

தனக்கு வாக்களித்து வெற்றிபெற வைத்த மக்களை சித்தராமையா மறந்துவிட்டார். இந்த தேர்தலில் அவர் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் தோல்வி அடைவார்.

பாலியல் வழக்கில் சித்ரதுர்கா முருக மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு கைது செய்யப்பட்டுள்ளார். அவர் செய்தது மன்னிக்க முடியாத குற்றம். அவர் இவ்வாறு கீழ்தரமான செயலில் ஈடுபடுவார் என்று நான் நினைக்கவில்லை. அவருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.'

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்