மத்திய அரசின் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்துக்கு தேர்தல் கமிஷனின் பரிந்துரை என்ன?

'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்தை ஆதரித்து உள்ள தேர்தல் கமிஷன், அதை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கு பல்வேறு பரிந்துரைகளையும் வழங்கி உள்ளது.

Update: 2023-09-01 23:45 GMT

புதுடெல்லி, 

நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்ட மன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வகையில் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்தை மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே பரிந்துரைத்து இருந்தது.

இது தொடர்பான சாத்தியக்கூறுகளை மத்திய சட்டம் மற்றும் பணியாளர் நலத்துறை நிலைக்குழு ஏற்கனவே ஆராய்ந்தது. கடந்த 2015-ம் ஆண்டு நடந்த இந்த ஆய்வின் ஒரு பகுதியாக தேர்தல் கமிஷனிடமும் கருத்து கேட்கப்பட்டது.

இதில் தேர்தல் கமிஷன் பல்வேறு பரிந்துரைகள் வழங்கி இருந்தது. இது தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

மக்களவையின் பதவிக்காலம் பொதுவாக ஒரு குறிப்பிட்ட தேதியில் தொடங்கி 5 ஆண்டுகளில் காலாவதியாகிவிடும். (முதல் அமர்வின் தேதியிலிருந்து ஐந்தாண்டுகளை நிறைவு செய்யும் தேதியில் அல்ல).

மக்களவையின் பதவிக்காலம் முடியும் நாளில் மாநில சட்டசபைகளின் பதவிக்காலமும் நிறைவுக்கு வரவேண்டும்.

5 ஆண்டுகளுக்கு இடையில் மத்தியிலோ அல்லது மாநிலங்களிலோ அரசு கவிழும் பட்சத்தில் மீதமுள்ள காலத்துக்கு என மாற்று அரசு அமைக்க வேண்டும்.

இதை எதிர்க்கட்சிகள் நம்பிக்கை வாக்கெடுப்பு மூலமோ, அல்லது புதிதாக தேர்தல் மூலமோ மீதமுள்ள காலத்துக்கு என அரசு அமைக்க வேண்டும்.

அதாவது மக்களவை முன்கூட்டியே கலைப்பதை தடுப்பதற்காக, நம்பிக்கை இல்லா தீர்மானத்துடன், ஒரு தனிநபரை அடுத்த பிரதமராக கொண்டு நம்பிக்கை தீர்மானமும் கொண்டு வரப்பட வேண்டும். பின்னர் இந்த 2 தீர்மானங்கள் மீதும் வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.

ஆனால் அவை கலைப்பு தவிர்க்க முடியாத பட்சத்தில், மீதமுள்ள காலத்துக்கு என புதிதாக தேர்தல் நடத்த வேண்டும்.

அதேநேரம் அவையின் மீதமுள்ள பதவிக்காலம் அதிகம் இல்லாதபட்சத்தில், ஜனாதிபதி தலைமையில் நிர்வாகத்தை ஏற்படுத்த வேண்டும். அவருக்கு உதவியாக மந்திரிகள் கவுன்சிலை அவர் நியமித்துக் கொள்ளலாம்.

இதே நடைமுறையை மாநிலங்களிலும் கவர்னர்கள் மூலம் செயல்படுத்தலாம்.

இந்த விவகாரத்தில் புதிய தேர்தலா அல்லது ஜனாதிபதி ஆட்சியா என்பதை முடிவு செய்வதற்காக, அவையின் மீதமுள்ள பதவிக்காலத்தின் கால அளவு முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட வேண்டும்.

தேர்தலுக்குப்பின் புதிய அரசை அமைக்க எந்த கட்சியாலும் முடியவில்லை என்றால், புதிய தேர்தல் நடத்துவது அவசியம் என்றால், அவையின் மீதமுள்ள காலத்துக்கு மட்டுமே தேர்தல் நடத்த வேண்டும்.

இதைப்போல ஒரு அரசு ராஜினாமா செய்தால், மாற்று அரசு அமைப்பதற்கான வாய்ப்பு இல்லை என்றால், மீதமுள்ள காலத்துக்கு என தேர்தல் நடத்த வேண்டும்.

இதிலும் மீதமுள்ள கால அளவை பொறுத்து தேர்தலா? அல்லது ஜனாதிபதி அல்லது கவர்னர் ஆட்சியா? என்பதை முடிவு செய்ய வேண்டும்.

இடைத்தேர்தல்களை பொறுத்தவரை, ஆண்டுக்கு இரு முறை அல்லது ஒருமுறை என நடத்தலாம்.

இவ்வாறு தேர்தல் கமிஷன் தனது பரிந்துரைகளை வழங்கி இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்