கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது மோடி பிரதமராக வேண்டி விரலை வெட்டி காளி தேவிக்கு ரத்த அபிஷேகம் செய்தவர் தற்போது என்ன செய்கிறார்....?
அவரது வேண்டுதல் படியே 2019-ம் ஆண்டு தேர்தலிலும் பா.ஜனதா ஆட்சி அமைந்தது. மோடி 2-வது முறையாக பிரதமராக தேர்வானார்.;
கடந்த 2014-ம் நாடாளுமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று பா.ஜனதா மத்தியில் ஆட்சி அமைத்தது. இதைத்தொடர்ந்து 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது மோடி மீண்டும் பிரதமர் ஆக வேண்டும் என்று அவரது கட்சியினர், ஆதரவாளர்கள் கோவில்களில் சிறப்பு பூஜை, யாகம் நடத்தினர். அப்போது கர்நாடக மாநிலம் உத்தரகன்னடா மாவட்டம் கார்வார் தாலுகா சோனார்வாடா பகுதியைசேர்ந்த பிரதமர் மோடியின் தீவிர ஆதரவாளரான அருண் எஸ்.வர்னேகர் தனது விரலை வெட்டி காளி தேவி படத்திற்கு ரத்த அபிஷேகம் செய்தார். மேலும் அருகில் வைத்திருந்த பிரதமர் மோடி உருவப்படத்தின் நெற்றியிலும் ரத்த திலகமிட்டார். அத்துடன் சாய்பாபா படத்திலும் ரத்தத்தை தடவினார். அவரது வேண்டுதல் படியே 2019-ம் ஆண்டு தேர்தலிலும் பா.ஜனதா ஆட்சி அமைந்தது. மோடி 2-வது முறையாக பிரதமராக தேர்வானார்.
அருண் எஸ்.வர்னேகர் தனது வீட்டு பூஜை அறையில் கடவுள் படங்களுடன் மோடியின் படத்தை வைத்து வழிபாடு நடத்துகிறார். அத்துடன் தனது மார்பில் பிரதமர் மோடி படத்ைத பச்சைகுத்தியுள்ளார். அத்துடன் பூஜை அறை சுவரில் பிரதமர் மோடி 2014-ம் ஆண்டு முதல் 2029-ம் ஆண்டு வரை பிரதமராக இருப்பார் எனவும் எழுதி வைத்துள்ளார்.
மோடியின் தீவிர ஆதரவாளரான அருண் எஸ்.வர்னேகர் தற்போது என்ன செய்கிறார் என்பது பற்றி அவரிடம் கேட்டோம். அவர் கூறுகையில், தற்போது பிரதமர் மோடி கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி மாநிலம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அவரை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆவல் உள்ளது. விரைவில் அது நடைபெறும் என நம்புகிறேன். கடந்த 2019-ம் ஆண்டு பிரதமர் மோடி பிரதமர் ஆக எனது விரலை வெட்டி காளி தேவிக்கு ரத்த அபிஷேகம் செய்தேன். கடவுள் அருளால் அவர் மீண்டும் பிரதமர் ஆனார். அவர் 2029-ம் ஆண்டு வரை பிரதமர் பதவியில் நீடிப்பார். பிரதமர் மோடிக்காக எனது உயிரையும் கொடுப்பேன். பிரதமர் மோடியுடன் நேரில் சந்திக்க பா.ஜனதாவினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.