இங்கிலாந்து கல்வி முறையால் பாதிக்கப்பட்ட காலனி நாடுகள் குறித்து ஆனந்த் மகேந்திரா பகிர்ந்த டுவீட்..!!
இங்கிலாந்து கல்வி முறை அதன் காலனித்துவ நாடுகளை எவ்வாறு பாதித்தது என்பது குறித்து ஆனந்த் மஹிந்திரா ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.;
சென்னை,
நாட்டின் முன்னணி நிறுவனமான மகேந்திர நிறுவனத்தின் தலைவராக இருப்பவர் ஆனந்த் மகேந்திரா. முன்னணி தொழிலதிபரான ஆனந்த் மகேந்திரா பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டர் வலைத்தளத்தில் ஆக்டிவாக இருப்பவர்.
தனித்துவமான விஷயங்கள் மற்றும் தனிமனிதர்களின் சாதனைகளை கண்டறிந்து அதற்கு பாராட்டுகளையும் வெகுமதிகளையும் தொடர்ந்து வழங்கிவருகிறார். இந்த நிலையில் ஆனந்த் மஹிந்திரா இன்று செய்த டுவீட் மீண்டும் இணையவாசிகளிடம் கவனம் பெற்றுள்ளது.
இங்கிலாந்து கல்வி முறை அதன் காலனித்துவ நாடுகளை எவ்வாறு பாதித்தது என்பது குறித்து ஆனந்த் மஹிந்திரா ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் இங்கிலாந்தில் வசிக்கும் காமெடி நடிகர் டாலிசோ சபோண்டாவின் ஸ்கிட்டின் ஆடியோவை பகிர்ந்துள்ளார்.
அந்த ஆடியோவில் பேசும் டாலிசோ சபோண்டா, தான் ஜாம்பியா, சோமாலியா மற்றும் கென்யா போன்ற ஆப்பிரிக்க நாடுகளில் இங்கிலாந்து நடத்தும் பள்ளிகளில் படித்த போது அந்த பள்ளிகளில் ஆங்கிலம், பிரஞ்சு மற்றும் லத்தீன் கற்றுக் கொடுக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். மாறாக, சுவாஹிலி மற்றும் சோமாலி போன்ற அவரது உள்ளூர் மொழிகள் புறக்கணிக்கப்பட்டதாக டாலிசோ தெரிவித்துள்ளார்.
வரலாற்று பாடப்புத்தகங்களில் வில்லியம், ஹென்றி போன்ற இங்கிலாந்து மன்னர்களை பற்றியே அதிகம் கற்றுக் கொண்டதாகவும் எந்த ஆப்பிரிக்க வரலாற்றையும் கற்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார். தான் படித்த பள்ளியில் 'ஆப்பிரிக்க கலாச்சாரம் புறந்தள்ளப்பட்டதாகவும் இங்கிலாந்து கலாச்சாரம் அருமையானது' என கற்பிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த ஆடியோவை பகிர்ந்து மகேந்திரா வெளியிட்டுள்ள ஒரு வரி பதிவில், குறைபாடற்ற தர்க்கம் சுற்றி வருவதாக தெரிவித்துள்ளார். ஆப்பிரிக்க நாடுகளை போலவே இந்தியாவும் இங்கிலாந்தின் முன்னாள் காலனித்துவ நாடாக இருந்தது. இதனால் ஆப்பிரிக்க நாடுகளின் கல்வியில் இங்கிலாந்து வரலாறுகள் எவ்வாறு திணிக்கப்பட்டதோ அதே போல் தான் நமது நிலைமையும் என்பதை சுட்டிக்காட்டவே ஆனந்த் மகேந்திரா இவ்வாறு சூசககமாக பதிவிட்டு இருக்கலாம் என இணையவாசிகள் தெரிவித்து வருகின்றனர்.