மேற்கு வங்காளம்: இன்று தான் தேர்தல் தினம் என்ற உணர்வு ஏற்படுகிறது; வாக்காளர் பேட்டி

மேற்கு வங்காளத்தில் பலத்த பாதுகாப்புடன் பஞ்சாயத்து தேர்தல் மீண்டும் நடைபெறும் சூழலில், இன்று தான் தேர்தல் தினம் என்ற உணர்வு ஏற்படுகிறது என பெண் வாக்காளர் பேட்டியில் கூறியுள்ளார்.

Update: 2023-07-10 03:05 GMT

முர்ஷிதாபாத்,

மேற்கு வங்காளத்தில் பஞ்சாயத்து தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. பல இடங்களில் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரசுக்கும், எதிர்க்கட்சிகளான பா.ஜ.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கும் இடையே வன்முறை ஏற்பட்டது. ஓட்டு பெட்டிகள் எரிப்பு, துப்பாக்கி சூடு போன்ற நிகழ்வுகள் நடந்தன. வன்முறைக்கு பலி எண்ணிக்கை 17 ஆக உயர்ந்தது.

இந்த நிலையில், மேற்கு வங்காளத்தின் புரூலியா, பிர்பும், ஜல்பைகுரி, நாடியா மற்றும் தெற்கு 24 பர்கானாஸ் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள 697 வாக்கு சாவடிகளில் மறுதேர்தல் நடத்த முடிவானது. இன்று காலை 7 மணி தொடங்கி மாலை 5 மணி வரை தேர்தல் நடைபெற உள்ளது.

இதில், வன்முறை அதிகம் பாதித்த முர்ஷிதாபாத் நகரின் திகியாபாரா முதன்மை பள்ளி கூடத்தில் வாக்கு மையம் ஒன்றிற்கு வெளியே வாக்காளர்கள் வரிசையாக வாக்களிப்பதற்காக காத்து நிற்கின்றனர்.

அவர்களில் பெண் வாக்காளரான அஞ்சனா மஜும்தார் கூறும்போது, முதல் நாளில் மத்திய படைகள் எதுவும் இல்லை. 3 காவலர்களே இருந்தனர். ஆனால், இன்று மத்திய படைகள் வருகை தந்து உள்ளன. நாங்கள் முறையாக வாக்களித்து விட்டு வீட்டுக்கு செல்வோம் என கூறியுள்ளார்.

இதேபோன்று மற்றொரு பெண் வாக்காளரான அனாமிகா மண்டல் கூறும்போது, இன்று தான் தேர்தல் தினம் என்ற உணர்வு ஏற்பட்டு உள்ளது. மத்திய படைகளை இன்று எங்களால் பார்க்க முடிகிறது என கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்