மேற்கு வங்காளம் என்றால் மத்திய குழுக்கள் வருகின்றன; மணிப்பூர் வன்முறையில் அரசியலை கொளுத்தி போட்ட மம்தா பானர்ஜி

மணிப்பூர் வன்முறையில் நான் அரசியலை புகுத்தமாட்டேன் என்று மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி இன்றுகூறியுள்ளார்.

Update: 2023-05-08 12:23 GMT

கொல்கத்தா,

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் மெய்தெய் என்ற மெஜாரிட்டி சமூகத்தினர் தங்களை பழங்குடியினத்தில் சேர்க்க வேண்டும் என அரசிடம் கோரிக்கை விடுத்தனர். இதற்கு பழங்குடி பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து, ஊர்வலம் நடத்தினர். இதற்கு போட்டியாக மெய்தெய் சமூகத்தினரும் ஊர்வலம் சென்றனர். இதில், இரு பிரிவினருக்கும் இடையே கடந்த 3-ந்தேதி மோதல் உருவானது. இரு தரப்பினர் நடத்திய ஊர்வலம், வன்முறையாக மாறி கலவரம் வெடித்தது.

இந்த கலவரம் பல்வேறு மாவட்டங்களுக்கும் பரவி, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. வாகனங்கள், வீடுகள், பள்ளி கூடங்கள், கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளிட்டவற்றை ஆர்ப்பாட்டக்காரர்கள் அடித்து நொறுக்கியும், தீ வைத்து கொளுத்தியும் உள்ளனர்.

வன்முறை மற்றும் பதற்ற சூழலால், இதுவரை அப்பாவி மக்கள் 54 பேர் உயிரிழந்து உள்ளனர். நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் குவிக்கப்பட்டனர். வன்முறை பல மாவட்டங்களுக்கு பரவியதும், அரசு தீவிர நடவடிக்கை எடுத்தது. இணையதள சேவையை முடக்கியும், ஊரடங்கை அமல்படுத்தியும் உள்ளது.

பொதுமக்கள் அமைதி காக்குமாறு முதல்-மந்திரி பிரேன் சிங் கேட்டு கொண்டார். சட்டம் மற்றும் ஒழுங்கை மீட்டெடுக்கவும், கூடுதல் பாதுகாப்பிற்காகவும் இந்திய ராணுவம் மற்றும் அசாம் ரைபிள் படை பிரிவுகளும் வரவழைக்கப்பட்டன.

நிலைமை அத்துமீறி சென்ற நிலையில், வன்முறை பரவாமல் தடுக்கும் நோக்கில், 5 நாட்களுக்கு மணிப்பூரில் இணைய தள சேவை துண்டிக்கப்பட்டது. மேலும், வன்முறையை கட்டுப்படுத்த 8 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவையும் அரசு அமல்படுத்தியது. கலவரக்காரர்களை கண்டதும் சுடவும் உத்தரவிடப்பட்டது.

அதிரடி விரைவு படையினரும், ராணுவம் மற்றும் துணை ராணுவம் படையினரும் கூடுதல் பாதுகாப்பிற்காக மணிப்பூரின் பல பகுதிகளிலும் குவிக்கப்பட்டனர். ஆயுதமேந்திய வீரர்களின் உதவியுடன், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும், ரோந்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.

மணிப்பூர் வன்முறையில் இந்திய ராணுவம் மற்றும் அசாம் ஆயுத படை உதவியுடன் இதுவரை 23 ஆயிரம் பேர் மீட்கப்பட்டு உள்ளனர். மணிப்பூரில் நீட் தேர்வை தள்ளி வைத்து, தேசிய தேர்வு முகமை அறிவித்தது. மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி போனது.

இந்த நிலையில், மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி இன்று கூறும்போது, மணிப்பூர் எரிந்து கொண்டிருக்கிறது. துப்பாக்கி சூட்டில் எத்தனை பேர் உயிரிழந்து உள்ளனர் என நமக்கு தெரியாது.

இதற்கான எண்ணிக்கையை அந்த மாநில அரசு வழங்கவில்லை. மணிப்பூர் வன்முறை சம்பவத்தில் நான் அரசியலை புகுத்தமாட்டேன். ஆனால், எத்தனை பேர் மரணம் அடைந்து உள்ளனர் என தெரிந்து கொள்ள மக்கள் விரும்புகின்றனர்.

மேற்கு வங்காளத்தில் ஏதேனும் நடந்து விட்டது என்றால் அவர்கள் மத்தியில் இருந்து குழுக்களை அனுப்பி வைக்கின்றனர். அவர்களது அந்த முடிவுக்கு நிறைய விளக்கங்களையும் அவர்கள் தருகின்றனர் என்று கூறியுள்ளார். மேற்கு வங்காளத்தில் ராமநவமி கொண்டாட்டத்தின்போது இரு தரப்பினர் இடையே மோதல் உருவானது. அது வன்முறையில் முடிந்தது. இதனை தொடர்ந்து மத்திய அரசு நிலைமையை பற்றி ஆய்வு செய்ய அப்போது, மத்திய குழுக்களை அனுப்பி வைத்தது.

Tags:    

மேலும் செய்திகள்