பாலியல் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை: மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பினார் மே.வங்க கவர்னர்
"மேற்கு வங்க சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட் மசோதாவை அம்மாநில கவர்னர் சி.வி. ஆனந்த் போஸ், ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளார்.;
கொல்கத்தா,
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பெண் டாக்டர் கருத்தரங்கு அறையில் கடந்த மாதம் 9-ம் தேதி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து மேற்கு வங்கத்தில் பாலியல் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை அளிக்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்படும் என்று மம்தா பானர்ஜி கூறினார். அந்த வகையில், கடந்த 3 ஆம் தேதி மேற்கு வங்க சட்டமன்ற கூட்டம் கூடியது. இந்தக் கூட்டத்தில், பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது.
அபராஜிதா பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு மசோதா 2024' எனப் பெயரிடப்பட்ட இந்த மசோதா, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைத் தடுத்து (குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கி) பாதுகாப்பளிக்கும் வகையில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த மசோதாவை கவர்னர் சி.வி.ஆனந்த் போஸ், ஜனாதிபதி திரவுபதி முர்முவின் ஒப்புதலுக்காக அனுப்பிவைத்துள்ளார்.