கொல்கத்தாவில் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து

கொல்கத்தாவில் உள்ள வணிக வளாக கட்டிடம் ஒன்றில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.;

Update: 2022-10-24 20:15 GMT

கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநிலம் பரகானாஸ் மாவட்டத்தில் உள்ள பண்டாலாவில் ஒரு வணிக வளாக கட்டிடம் உள்ளது. இந்த வணிக வளாக கட்டிடத்தில் தோல் குடோன் இருக்கிறது.

இந்த நிலையில், நேற்று மதியம் தோல் குடோனில் திடீரென்று தீப்பிடித்தது. அந்த தீ மளமளவென குடோனில் இருந்த தோல் பொருட்களில் பிடித்து எரிந்தது. இதுபற்றி அறிந்ததும் 15 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு படைவீரர்கள் அங்கு விரைந்து வந்தார்கள். பின்னர் குடோனில் பிடித்த தீயை, தீயணைப்பு படைவீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தார்கள்.

மேலும் வணிக வளாகத்தில் கட்டிடத்தில் சிக்கி இருந்த சிலரை தீயணைப்பு படைவீரர்கள் பத்திரமாக மீட்டார்கள். தீ விபத்து சம்பவத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீ விபத்தில் அங்கிருந்த பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது.

முன்னதாக தீ விபத்து நடந்த காம்பிளக்ஸ் கட்டிடத்தை மந்திரி சுஜீத் போஸ் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். தீ விபத்திற்கான காரணம் குறித்து தீயணைப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்