மேற்கு வங்காளம்: நடப்பு ஆண்டில் 76 ஆயிரம் பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி

மேற்கு வங்காளத்தில் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, நடப்பு ஆண்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது.

Update: 2023-10-31 12:09 GMT

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. இதேபோன்று, வடக்கு 24 பர்கானாஸ், தெற்கு 24 பர்கானாஸ் மற்றும் ஹவுரா ஆகிய மாவட்டங்கள் அதிக அளவில் பாதிப்படைந்து உள்ளன என மாநில சுகாதார துறை தெரிவித்து உள்ளது.

இதுதவிர, ஹூக்ளி, மால்டா மற்றும் முர்ஷிதாபாத் ஆகிய மாவட்டங்களில் நிலைமை மோசமடைந்து உள்ளது என்றும் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, நடப்பு ஆண்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. கடந்த ஆண்டு மொத்த டெங்கு பாதிப்பு எண்ணிக்கை 67,271 ஆக இருந்தது.

ஆனால், நடப்பு ஆண்டில் அக்டோபர் 24-ந்தேதி வரை மொத்தம் 76 ஆயிரம் பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில், கடந்த 14-ந்தேதி முதல் 24-ந்தேதி வரையிலான 10 நாட்களில் 9 ஆயிரம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது கண்டறியப்பட்டது.

மேற்கு வங்காளத்தில் டெங்கு பாதிப்பால் 65 பேர் உயிரிழந்து உள்ளனர் என சில அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், எதிர்க்கட்சியான பா.ஜ.க. கூறும்போது, உண்மையான பலி எண்ணிக்கை 100-க்கும் கூடுதல் என தொடர்ந்து கூறி வருகிறது.

டெங்குவால் ஏற்படும் உயிரிழப்புகளை மர்ம காய்ச்சல் என கூற அரசு மருத்துவமனை மருத்துவர்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர் என்றும் அக்கட்சியினர் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.

ஆனால், தேவையான நிதி உதவியை வழங்க மத்திய அரசு மறுக்கிறது என மேற்கு வங்காள அரசு மற்றொரு புறம் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றது.

Tags:    

மேலும் செய்திகள்