மேற்கு வங்காளம்: சிறப்பு மலை ரெயிலில் மாற்று திறனாளி குழந்தைகள் மகிழ்ச்சி பயணம்

மேற்கு வங்காளத்தில் குழந்தைகள் தினத்தில் சிறப்பு மலை ரெயிலில் மாற்று திறனாளி குழந்தைகள் மகிழ்ச்சி பயணம் மேற்கொண்டனர்.;

Update: 2022-11-15 03:25 GMT


சிலிகுரி,

நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் இந்தியாவின் முதல் பிரதமராக பதவியேற்ற பண்டிட் ஜவகர்லால் நேருவின் பிறந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது. அவரது பிறந்த தினம், குழந்தைகள் தினம் ஆகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.

மேற்கு வங்காளத்தில் நியூ ஜல்பைகுரி மற்றும் டார்ஜிலிங் இடையே டாய் டிரெயின் எனப்படும் மலை ரெயில் இயக்கப்படுகிறது. குழந்தைகள் தினத்தில் மாற்று திறனாளி குழந்தைகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இந்த ரெயிலில் அவர்களை தன்னார்வ தொண்டு அமைப்பு பயணம் செய்ய வைத்து மகிழ்வித்து உள்ளது.

இதுபற்றி, சிலிகுரி நகரில் உள்ள தன்னார்வ அமைப்பின் நிறுவனர் சக்தி பால் கூறும்போது, குழந்தைகள் தினத்தில் மாற்று திறனாளி குழந்தைகளுக்கு ஏதேனும் செய்து மகிழ்விக்க வேண்டும் என நாங்கள் முயற்சி மேற்கொண்டோம்.

அதனால், பாரம்பரிய மலை ரெயிலில் அவர்களை பயணம் செய்ய வைத்தோம். இந்த மலை ரெயில் பயணம் அழகாக இருந்தது. இதனால் குழந்தைகள் மகிழ்ச்சி அடைந்தனர் என கூறியுள்ளார்.

இதன்படி, சிலிகுரி சந்திப்பில் இருந்து ரோங்டாங் வரையிலான 18 கி.மீ. தொலைவு பயணத்தில் 50 பார்வையற்ற மற்றும் மாற்று திறனாளி மாணவர்கள் அழைத்து செல்லப்பட்டனர்.

இதில் பயணித்த ஜோதி தொப்போ என்ற மாற்று திறனாளி குழந்தை கூறும்போது, இது எனது முதல் மலை ரெயில் பயணம் ஆகும். ஆச்சரியம் நிறைந்து இருந்தது. இந்த நாளை நாங்கள் தனித்துவமுடன் கொண்டாடினோம். அடுத்த ஆண்டும் இதேபோன்று கொண்டாடுவோம் என எதிர்பார்க்கிறோம் என கூறியுள்ளார்.

இந்த பயணத்தில், கலந்து கொண்ட மாணவ மாணவிகள் ரெயிலில் பாட்டுக்கள் பாடியும், உற்சாக நடனம் ஆடியும் மகிழ்ந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்